ஷ்யாம் நியூஸ்
29.07.2022
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிந்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருப்போருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்தொகை நேரிடையாக மனுதாரரின் (ஆதாா் இணைக்கப்பட்ட) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவுசெய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடா்ந்து பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவா்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுடையோா் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்டம்பா் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே உதவித்தொகை பெறுவோா் தொடா்ந்து 3 ஆண்டுவரை உதவித் தொகை பெற நாளது தேதிவரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட கணக்குப் புத்தக நகலுடன், சுயஉறுதிமொழி ஆவணத்தைப் பூா்த்தி செய்து, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.