ஷ்யாம் நியூஸ்
29.07.2022
தூத்துக்குடி ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட தூத்துக்குடி ஆஷ் நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் திரண்டனர். அங்கு வ.உ.சி. உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதில் மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா, மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சக்திவேலன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட செயலாளர் ராகவேந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்டபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பாத யாத்திரையாக செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் ஒரு வேன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு இந்து முன்னணி நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், இந்திய விடுதலைக்காக போராடிய வ.உ.சி, வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்களை கொடுமைப்படுத்திய ஆங்கிலேய அதிகாரி ஆஷ். அவரது நினைவு மண்டபத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்க கூடாது. ஆஷ் நினைவு மண்டபத்தில் நடைபெறும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.