ஷ்யாம் நியூஸ்
26.07.2022
பண்ருட்டி அருகே கபடி விளையாட்டின்போது ஆடுகளத்திலேயே கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அடுத்த காடாம் புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற விமல்ராஜ் (21). இவர், சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம்ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்றுவந்தார். பண்ருட்டியை அடுத்த மானடி குப்பத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு நடை பெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரணியைச் சேர்ந்தவர்கள், அவரை பிடித்தபோது, கீழே விழுந்தார். மீண்டும் எழமுயற்சித்தபோது, எழ முடியாமல் மயங்கி விழுந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். முத்தாண்டிக்குப்பம் போலீஸார் விமல்ராஜ் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.