ஷ்யாம் நியூஸ்
25.07.2022
தூத்துக்குடி அருகே பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் கொம்பையா (15), புதியம்புத்தூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இவரது தந்தை வெளியூர் சென்று விட்டாராம், தாயார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டாராம். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கொம்பையா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்கு வந்த தாயார் மகன் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் கொம்பையா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட கொம்பையா, அதே பகுதியை மாணவியை காதலித்து வந்ததாகவும், இந்த விவரம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, படிக்கின்ற வயதில் இது தேவையா என்று சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த கொம்பையா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.