25.07.2022
நாசரேத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பைக், டி.வி. போன்ற பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் கதீட்ரல்ரோட்டில் வசித்து வருபவர் அகஸ்டின் ஸ்பர்ஜர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகன் நாசரேத் வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அகஸ்டின் ஸ்பர்ஜர் மனைவி இறந்து விட்டதால் இறப்புக்கு வந்த மகள் தனது தந்தையை அமெரிக்காவிற்கு கூட்டி சென்றுள்ளார்.
நாசரேத் வீட்டில்மகன் சில்வான்ஸ் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது சென்னையிலும் இவருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. தனது வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்பதால் சென்னை வீட்டை அடைத்து விட்டு நாசரேத்திலுள்ள தனது தந்தை வீட்டில் இருந்து அவரும் அவரது மனைவியும் பணி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி சனிக்கிழமை சென்னையில் உள்ள வீட்டை பார்ப்பதற்காக மனைவியுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவில் வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே சென்று தேக்கு மரத்திலான முன் கதவையும் கம்பியால் உடைத்து வீட்டுக்குள் இருந்த 55" டி.வி, விலை மோட்டார் பைக், 3 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று காலையில் வீட்டு முற்றத்தை பெருக்குவதற்காக வந்த முத்து மணி என்பவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு, கேட் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு, அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அகஸ்டின் ஸ்பர்ஜர் மாமா மகன் ஆஸ்டின் மைக்கேல் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாசரேத் சப் இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்தளு.