திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வறை : மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு !
ஷ்யாம் நியூஸ்
29.07.2022
தூத்துக்குடியில், திருச்செந்தூர் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்காக ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி அவசர பொதுக்கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது "திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கிறார்கள் விழாக் காலங்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள்.
பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு உப்பாற்று ஓடை அருகே ஓய்வறை பூங்கா கட்டப்பட உள்ளது. இதில் பக்தர்களுக்கு தூங்குவதற்கான இடம், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது என்றார்.
இதனை அனைத்து உறுப்பினர்களும் மேஜை தட்டி வரவேற்றனர். பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒவ்வொரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டூராஜா, கலைச்செல்வி நிர்மல்ராஜ், சுரேஷ்குமார் மற்றும் மாநகராட்சி பொறியாளர் சுரேஷ் ஜான் பொன்னையா, துணை ஆணையர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.