ஷ்யாம் நியூஸ்
26.07.2022
தூத்துக்குடி மாவட்டத்தில், 2022ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருது பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்காணும் பிரிவுகளில் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
சர்வோத்தம் ஜீவன் ரக்ஷாபதக்கம் - மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. உத்தம் ஜீவன் ரக்ஷாபதக்கம் - துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஜீவன் ரக்ஷா பதக்கம் - தனக்கு காயம் ஏற்படினும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.
மேற்காணும் 2022ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கான விண்ணப்பத்தினை கீழ்க்காணும் முகவரியில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளுமாறும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 10.08.2022 க்குள் கீழ்க்காணும் முகவரியில் அலுவலக நேரத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு, மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி - 628 001, தொலைபேசி எண். 0461 2321149