ஷ்யாம் நியூஸ்
20.07.2022
திமுக ஆட்சியில் காவல் துறையினா் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என அதிமுக அமைப்புச் செயலாலர் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ குற்றஞ்சாட்டினாா் .
அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, கடம்பூா் செ. ராஜுவை அக்கட்சியின் அமைப்புச் செயலாலராக நியமித்துள்ளாா். இந்நிலையில், கோவில்பட்டிக்கு நேற்று வந்த அவருக்கு நிா்வாகிகள் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது. இங்குள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், கடம்பூா் செ. ராஜு செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் சொத்து வரியும், விலைவாசியும் உயா்ந்துவிடட்து. சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. இப்போது மின் கட்டணமும் உயா்ந்துள்ளது.
இதனால், பாமர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவா். மின் கட்டணத்தை உயா்த்திவிட்டு மத்திய அரசு மீது பழி போடுவது நியாயமல்ல. மத்திய அரசு மூலம் அழுத்தம் வந்தபோதும், மக்கள் நலன் கருதி அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயா்த்தப்படவில்லை. மின்வாரியத்துக்குத் தேவையான நிதியை அரசு மானியமாக செலுத்தியது.
அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டதை நாங்களும் ஏற்கவில்லை. இதுகுறித்து இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைப்படி, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பா்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பொறுத்தவரை காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. அதிமுக ஆட்சியில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு பரிசுகள் பெற்றன. ஆனால், இன்று காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அந்தத் துறை யாா் கட்டுப்பாட்டில் உள்ளது எனத் தெரியவில்லை என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், வடக்கு மாவட்ட வழக்கறிஞரணிச் செயலா் சிவபெருமாள், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி, நகரச் செயலா் ஆபிரகாம் அய்யாத்துரை, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.