வாஞ்சிமணியாச்சி அமிர்தவிழாவை முன்னிட்டு சுதந்திர போராட்டவீரர் வாஞ்சிநாதனின் புகைப்படக் கண்காட்சி திறக்கப்பட்டது .
ஷ்யாம் நியூஸ்
19.07.2022
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் நேற்று அமிர்தவிழா தொடங்கியது.
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு அமிர்த விழா வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா நேற்று மாலை வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் தொடங்கியது. விழாவில் உதவி பணியாளர் நல அலுவலர் மனோஜ் வரவேற்று பேசினார். அப்போது சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹர சுப்பிரமணியனுக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாப அனத் சால்வை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி வரவேற்றார்.
தொடர்ந்து சுதந்திர அமிர்த விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. தொடர்ந்து வாஞ்சிநாதனின் உருவப்படத்துக்கு ஹரிஹர சுப்பிரமணியன், அவரது மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். புகைப்பட கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களது தியாகங்கள் இடம் பெற்றிருந்தன.
பின்னர் மதுரை கோட்ட ரெயில்வே சாரணர் இயக்கம் சார்பில் வாஞ்சிநாதனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் முதுநிலை கோட்ட தொலைத்தொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், கோட்ட பாதுகாப்பு ஆணையர் அன்பரசு, மதுரை மண்டல ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ராதா, ரயில்வே பாதுகாப்பு கூடுதல் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிஸ்சந்திரன், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா வரும் 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.