ஷ்யாம் நியூஸ்
27.07.2022
தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் தீபத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு செஸ் ஒலிம்பியாட் தீபம் தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி செஸ் ஒலிம்பியாட் தீபம் நேற்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஒலிம்பியாட் தீபத்துக்கு சமூநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அரசு அதிகாரிகள், பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு ஒலிம்பியாட் தீபத்துக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கும் தீபம் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
செஸ்ஒலிம்பியாட் ஜோதி நேற்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு வந்தது. அங்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் ஜோதிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து பள்ளி மாணவர்களின் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் நடைபெற்றது. இதை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து சிறிது தூரம் பள்ளி மாணவர்களுடன் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ், தாசில்தார் சசிகுமார், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள், மற்றும் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளத்திற்கு வந்த செஸ் ஒலிம்பியாட் சுடருக்கு சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் தங்கையா தலைமை வகித்தார். சாத்தான்குளம் டிஎஸ்பி அருள், யூனியன் சேர்மன் ஜெயபதி, பேரூராட்சி செயல் அலுவளர் உஷா, சாத்தான்குளம் யூனியன் ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.