ஷ்யாம் நியூஸ்
28.07.2022
தூத்துக்குடியில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை அரவாளால் வெட்டியவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம் பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் ஆறுமுக நயினார் (40), இவரது மகள் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் சகாயம் மகன் அந்தோணி செல்வராஜ் (62) என்பவர்அவதூறாக பேசினாராம். இதனை ஆறுமுக நயினார் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தோணி செல்வராஜ் ஆறுமுக நயினாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆறுமுக நயினார் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சீலன், அந்தோணி செல்வராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.