ஷ்யாம் நியூஸ்
04.08.2022
தூத்துக்குடியில் செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் பெரியசாமி (40). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே கட்டிட தொழிலில் ஈடுபட்டு இருந்தாராம். அப்போது அவருடன் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த கட்டிட ஒப்பந்தக்காரர் பெரியசாமியை வேலையை விட்டு நிறுத்தி விட்டாராம்.
இதையடுத்து பெரியசாமி அந்த பெண்ணையும் சென்னைக்கு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில் தூத்துக்குடி போலீசார் பெண் மாயம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் பெரியசாமிக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு காவல் நிலையம் வரை சென்றது. இதனால் சென்னை போலீசார் தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தூத்துக்குடி போலீசார் அந்த பெண்ணையும், பெரியசாமியையும் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பெரியசாமி அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்களை, அந்த பெண்ணின் மகளான 17 வயது சிறுமிக்கு செல்போனில் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.