ஷ்யாம் நியூஸ்
04.08.2022
தூத்துக்குடி நகரின் தந்தை என போற்றப்படும் குரூஸ் பர்னாந்து நினைவு மண்டபம் கட்டும் பணியை உடனே துவங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகையிடம் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மக்கள் பேரவை நிர்வாகிகள் அளித்த மனு : முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர், முன்னாள் நகர்மன்ற தலைவர், தூத்துக்குடி நகருக்கு குடிநீர் கொண்டு வந்த கோமான் குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
மேலும் தற்போதைய அரசு தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து நினைவு மண்டபம் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் நவம்பர் 15ம் தேதி குரூஸ் பர்னாந்து அவர்களின் 152வது பிறந்த நாள் கொண்டாட இருக்கும் சூழ்நிலையில் மணிமண்டம் பணியை உடனே துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.