தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் பனைமர விதைகள் நடவுத்திட்டம் துவக்கவிழா*
ஷ்யாம் நீயூஸ்
14.08.2022
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் பனைமர விதைகள் நடவுத்திட்டம் துவக்கவிழா
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி இணைந்து காமராஜ் கல்லூரியில் மாணவ மாணவியருக்கு பனைமரங்கள் குறித்தும் பனைபொருட்களின் பயன்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர். பூங்கொடி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தாவரவியல் பேராசிரியர் டாக்டர்.குமரேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். காமராஜ் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் நாகராஜன் பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் ஜேசுதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.தனலெட்சுமி நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எழுபத்தைந்தாயிரம் பனை விதை நடவுத் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது : தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் மரம் பனைமரம் ஆகும். தாய்லாந்து , கம்போடியா , இலங்கை போன்ற நாடுகளில் பனைமரங்கள் இருந்தாலும் பனைமரத்தின் தாயகமே தமிழ்நாடுதான். தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான பனைமரத் தொழிலை பாதுகாத்திட ஒரு இயக்கமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பனைவிதைகள் நடவுப் பணிகளை சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்போடும் , அரசுத்துறை அலுவலர்களின் ஆதரவோடும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழர்களின் கற்பகவிருட்சமான பனைமரங்கள் குறித்தும் பனைமர தொழில் குறித்தும், இளைஞர் குழுக்கள் , இளையோர் மன்றங்கள் , மகளிர் சுயஉதவிக்குழுக்கள் விவசாயிகள் , பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
பனை மரத்திலிருந்து அபூர்வமான ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைக்கப் பெறுகிறது. உதாரணமாக நுங்கு , பனங்காய் , பனம்பழம், பதநீர் , பனங்கருப்பட்டி , பனைவெல்லம் , சில்லுக்கருப்பட்டி , பனங்கற்கண்டு , பனங்கிழங்கு , பனங்கிழங்கு மாவு , பனங்கிழங்கு புட்டு , பனம்பழ ஜுஸ் மற்றும் பனஞ்சீனி போன்ற விலை மதிப்புமிக்க இயற்கையான உணவு பொருட்கள் கிடைக்கிறது. நுங்கு , பனங்கிழங்கு மற்றும் கருப்பட்டி இந்த மூன்று பனைப்பொருட்களை வைத்தே பல மதிப்பு கூட்டு உணவுப் பொருட்களை உருவாக்க முடியும். தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் , உடன்குடி பகுதிகளில் உள்ள கருப்பட்டி இந்தியா முழுமைக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது தூத்துக்குடி மாவட்டம் பனைமரங்களுக்கும் பனைமர தொழிலுக்கும் பெயர் பெற்ற மாவட்டமாகும். ஒரு சில இடங்களில் பனைமரத் தொழில் அழியும் தருவாயில் உள்ளது. அந்த நிலையை மாற்ற இளைஞர்கள் முன் வர வேண்டும். இம்மாவட்டத்தில் பனை பொருட்கள் தொழில் பூங்கா அரசு அமைத்து கொடுத்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பனைமரத் தொழிலலையும் மீட்டெடுக்க முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்து லட்சம் பனைமர விதை நடவு செய்ய திட்டமிட்டு களப்பணி செய்து வருகிறோம். அதில் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் கருங்குளம் வட்டாரங்களில் மட்டும் 75 ஆயிரம் பனைவிதைகள் நடவு செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதனை இக்கல்லூரியில் தொடங்குகியுள்ளோம். தற்போது நமக்கு இது நுங்கு , பதநீருக்கான பருவ காலம். அதனால் எங்கள் கூட்டமைப்பு நண்பர்கள் உதவியுடன் சேலம் , ஈரோடு மாவட்டங்களில் இருந்து பனைவிதைகளை சேகரித்து இப்பகுதிகளில் நடவு செய்து வருகிறோம். நம்ம பகுதியில் ஆவணியில் பனம்பழம் பருவம் தொடங்கிவிடும். அப்போது ஆங்காங்கே குழுக்கள் அமைத்து பனைவிதை சேகரிப்பு பணி ஒரு பக்கம் நடைபெறும். மற்றோரு மக்கம் பனைவிதை நடவுப்பணி நடைபெறும். தமிழர்களின் தேசிய மரமான பனைமரத்தையும் , பனைமரத் தொழிலலையும் பாதுகாத்திட நாம் அனைவரும் ஒரு இயக்கமாக செயல்படுவோம் என்று பேசினார். தாவரவியல் பேராசிரியர்கள் டாக்டர் பொன்ரதி , பேராசிரியர் டாக்டர் முத்துஷீபா , அலுவலக கண்காணிப்பாளர் சரவணன் , உதவியாளர் சிவராமன் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர் ஜெயகனி நன்றி கூறினார்.