தூத்துக்குடி மக்கள் சமூக விரோதிகள் அல்ல! மனித உரிமை மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் அதிசயகுமார் கோரிக்கை.
ஷ்யாம் நீயூஸ்
22.08.20
தூத்துக்குடி மக்கள் சமூக விரோதிகள் அல்ல! மனித உரிமை மீறலை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வழக்கறிஞர் அதிசயகுமார் கோரிக்கை வைத்துள்ளர்.
தூத்துக்குடி வழக்கறிஞர் அதிசயகுமார் மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல காவல் துறை தலைவர், துணைத்தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது
தூத்துக்குடி மாவட்டமானது 20-10-1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கொடுத்து வருவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த மாவட்டத்தின் முதல் குடிமகனான மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்கு மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்து வந்தது.
கடந்த 22-05-2018ல் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்த மக்கள் மீது காவல்துறையினர் குருவிகளை சுடுவது போல சுட்டும், அடித்தும் 16 நபர்களை கொலை செய்தார்கள். அதன் பின்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமாகவும், மனித உரிமை மீறல் செயலையும் செய்து, பல வகைகளில் மக்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் அப்புறபடுத்தி வருகின்றார்கள்.
கடந்த சில வாரங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி தடுப்பு வேலைகளை அமைத்துள்ள காவல் துறையினர் தடுப்பு வேலியில் பொதுமக்கள் நிற்கும் முன் பகுதியில் முள் கம்பிகளை கட்டியும், காவல்துறையினர் நிற்கும் பின் பகுதியில் முள் கம்பிகள் இல்லாமலும் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். சர்வாதிகார நாட்டில் கூட பொதுமக்கள் அந்நாட்டின் அதிகாரிகளை சந்திக்க வரும் இடத்தில் முள் கம்பிகளை கட்டி தடுப்பது கிடையாது. நமது இந்திய நாட்டின் எல்லைகளில் தீவிரவாதிகள் ஊடுறுவதை தடுப்பதற்காக இதுபோன்ற முள்வேலிகளை அமைப்பது உண்டு.
இங்கு தூத்துக்குடி மக்கள் தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ அல்ல. தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்களது மாவட்டத்தின் முதல் குடிமகனான மாவட்ட கலெக்டரை சந்திப்பதை தடுப்பதற்கு முள் கம்பி வேலிகளை அமைத்துள்ளதால் முள்கம்பியில் பொதுமக்களோ, பெண்களோ, குழந்தைகளோ, ஊனமுற்றவர்களோ கைகளால் பிடிக்கும் போதோ, தடுப்பு வேலியில் சாயும் போதோ, ரத்தகாயங்கள் கடுமையாக ஏற்படும். காவல்துறையினரின் இச்செயல் மனித உரிமை மீறல் செயலாகும். காவல்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சுற்றி அமைத்துள்ள தடுப்பு வேளையில் கட்டி உள்ள முள் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.
ஆகவே மாவட்ட கலெக்டர் தூத்துக்குடி மக்கள் தங்களை சந்திக்க வருவதை பாதுகாப்பு என்ற பெயரில் தடுப்பு வேலியில் முள் கம்பிகளை அமைத்து உள்ளதை உடனடியாக அகற்றும் படி தூத்துக்குடி சமுக ஆர்வலரும் வழக்கறிஞருமான அதிசயகுமார் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.