ஷ்யாம் நியூஸ்
12.08.2022
கோவில்பட்டி அருகே ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதியதில் 8 மாத ஆண் குழந்தை மற்றும் பெண் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லோடு ஆட்டோவை புளியங்குடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். ஆட்டோ நள்ளிரவில் கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிப்பாறை அருகே உள்ள வளைவில் சென்ற போது எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்த டிப்பர் லாரி லோடு ஆட்டோ மீது மோதியது. இதில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த ராஜதுரை என்பவரது 8 மாத ஆண் குழந்தை கபிலேஷ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
மேலும் ரமேஷ் (29), வீரமணி (22), சமுத்திரவேல் மனைவி ராணி (39), இவரது மகள் விசுவாதினி (15), உயிரிழந்த கபிலேஷ் குமாரின் தாய் முகேஷ்பிரியா (23), மணிகண்டன் மனைவி கிருஷ்ண லீலாவதி, இவரது 2 வயது மகன் மதுரேஷன், மாடசாமி மகள் முக்தாஸ்ரீ (6), சிவா (18), பரமசிவன் (40), மாணிக்கம் (38), மனோஜ்(25), இனேஷ் (7), குமார் (47), டிரைவர் சுந்தரமூர்த்தி உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் முகேஷ் பிரியா, கிருஷ்ணலீலாவதி, மனோஜ், இனேஷ், முக்தாஸ்ரீ, மதுரேஷன், ராணி ஆகிய 7 பேர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கிருஷ்ணாலீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த டிரைவர் சிவராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.