ஷ்யாம் நீயூஸ்
25.04.2022
புன்னைக்காயல் ஊர்மக்கள் சார்பாக முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
புன்னைக்காயலில் பிறந்து தஞ்சை மறைமாவட்டக் குருவாகப் பணியாற்றும் அருள்முனைவர் அமுதன் அடிகளின் குருத்துவப் பொன் விழா, புன்னைக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் பர்னாண்டோவின் குருத்துவ வெள்ளி விழா, எழுத்தாளர் நெய்தல் யூ அண்டோ எழுதிய அமுதன் அடிகளின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா புன்னைக்காயல் ஊர்மக்கள் சார்பாக, 23.4. 2022 அன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சிவகங்கை மேனாள் ஆயர் சூசை மாணிக்கம் தலைமை தாங்கினார்.
இரு அருள்பணியாளர்களின் பணிகளை நினைவுகூர்ந்து அருள்பணி பென்சன், அருள்பணி இரவீந்திரன் பர்னாந்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அமுதன் அடிகளின் வாழ்வும் பணியும் நூலை மேதகு ஆயர் சூசைமாணிக்கம் வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். நூலை அருள்பணி சகாயம் பர்னாந்து, அருள்பணி செல்வன் பர்னாந்து, அருள்பணி சுதர்சன் பர்னாந்து ஊர்த்தலைவர் அமல்சன் பீரிஸ், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மிக்கேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நூலை ஆழி புத்திரன் அறிமுகம் செய்து பேசினார். எழுத்தாளர் நெய்தல் அண்டோ ஏற்புரை நிகழ்த்தினார். வெள்ளி விழா காணும் அருள்பணி பிராங்கிளின் பர்னாண்டோ, பொன்விழா காணும் முனைவர் அருள்பணி அமுதன் அடிகள் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் ஊர்க் கமிட்டி மற்றும் ஊர்மக்கள் சார்பில் *அமுதன் அடிகளுக்கு* *இதழியல் இமயம்* என்ற பட்டமும்,
*நெய்தல் அண்டோவின் எழுத்துப்பணியைப் பாராட்டி* *சமூகப் பேரொளி* என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
முன்னதாக வந்தோரை ஊர்த்தலைவர் அமல்சன் பீரிஸ் வரவேற்றார். புனித ஜோசப் மேனிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செபஸ்டின் ராஜா நன்றியுரை கூறினார். நிகழ்வை புனித ஜோசப் மேனிலைப்பள்ளி ஆசிரியப் பெருமக்கள் தொகுத்து வழங்கினர்.
விழாவுக்கான ஏற்பாட்டை ஊர்க் கமிட்டியுடன் இணைந்து ஊரிலுள்ள அனைத்துக் கமிட்டியினரும் செய்து இருந்தனர்.
இந்நிகழ்வில் புன்னையம்பதி மக்கள், மாணவ- மாணவியர், கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தினர், சேவியர்ஸ் ஆசிரியப் பெருமக்கள், அன்னை பரதர் நலச்சங்கத்தினர், அருட்சகோதரிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர் சிறார்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.