மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறியுள்ளார்.
ஷ்யாம் நியூஸ்
09.09.2022
மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை மழை பெய்தாலே மாநகரிலுள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் மழைநீர் குளம் போல தேங்கி விடுவது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால், மழைக்காலங்களில் மாநகர மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்பெரியசாமி தமிழக முதல்அரைமச்சரின் அறிவுறுத்தல்படி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கிடாத வகையிலான அடிப்படை பணிகளை முதல்கட்டமாக துவங்கி அவற்றை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதோடு இப்பணிகளை நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து துரிதப்படுத்தியும் வருகிறார்.
இதன்படி மாநகரிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வரும் பருவமழையினை கருத்தில்கொண்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளாக குடியிருப்புகள், முக்கிய சாலைகள் போன்ற இடங்களில் மழைநீர் தேங்கிடாத வகையில் புதியதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி, தூத்துக்குடி மாநகராட்சியின் நந்தகோபாலபுரம், ரஹ்மத் நகர், எஸ்.கே.எஸ்.ஆர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மேயர் ஜெகன்பெரியசாமி கூறியதாவது, தூத்துக்குடி மாநகரில் மழைக்காலத்தை கருத்தில்கொண்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் புதியதாக அமைக்கப்பட்டு வருவதுடன், ஏற்கனவே புழக்கத்திலுள்ள கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளது.
இந்தப்பணிகள் அனைத்தையும் வரும் மழைக்காலத்திற்கு முன்பாக முடித்திட ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்அடிப்படையில் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும் மழைக்காலத்திற்கு முன்பாக முற்றிலும் முடிக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள், திமுக வட்ட செயலாளர் பி.என்.ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, மாநகர தொண்டரணி அமைப்பாளர் ராமர், மேயரின் உதவியாளர்கள் ஜேஸ்பர், பிரபாகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.