திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!
ஷ்யாம் நியூஸ்
06.09.2022
திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மானாடு, தண்டபத்து பகுதியில் அரசு நிலங்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய துணிகரமாக மணல் கொள்ளை நடந்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் கே.என். இசக்கிராஜா தேவர் மனு அளித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அவர் அளித்த மனுவில் தெரித்துள்ளதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி சமூக பணிகளை செய்து வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம் பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் உடன்குடி பவர் பிளாண்ட் அருகில் மானாடு தண்டுபத்து கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான பட்டா இடங்களிலும் கடந்த சில நாட்களாக ஒரு பெரிய மணல் மாபியா கும்பல், 20க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் மற்றும் சவுடி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. அந்த கும்பல் கீழ திருச்செந்தூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/1, 91/2 & 96A/1 ஆகிய பட்டா இடங்களில் 3 அடி ஆழத்திற்கு சவுடி மணல் உள்ள அரசிடம் அனுமதி பெற்று, அந்த சீட்டினை வைத்துக் கொண்டு மேற்கண்ட மாநாடு தண்டுபத்து கிராமத்தில் 20 முதல் 25 அடி ஆழத்திற்;கு சவுடுமணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த தொழிலை மையமாக கொண்ட பகுதியாகும்.
அங்கு 25 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் அடியோடு அழிக்கப்படுவதோடு, கால்நடைகளும், குழந்தைகளும் அதில் விழுந்து மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் உலக பிரசித்தி பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா வரும் நாட்களில் நடைபெற உள்ளதால் விழாவிற்கு வரும் வெளியூர் பக்தர்களும் மணல் அள்ளிய பள்ளங்களில் தேங்கும் மழைநீர் ஆழம் தெரியாமல் இறங்கி மூழ்கி இறக்கும் அபாயமும் உள்ளது. மேற்படி மணல் கொள்ளை நாட்டிற்கே பெரிய அபாயம் என்றும், தற்போது அதனை தடுக்காவிட்டால் எதிர்கால சந்ததிகள் குடிக்க கூட தண்ணீர் இருக்காது என உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையிலும், ஒரு சில அரசு அதிகாரிகளின் துணையோடு மேற்படி கும்பல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மேற்படி பகுதி கடலோர பகுதி என்றும் பாராமல் 20 முதல் 25 அடி ஆழத்திற்கு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் கடல்நீர் உட்புகும் அபாயமும் உள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் மணல் அள்ள மத்திய கடலோர பாதுகாப்பு அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு புறம்பாக கீழதிருச்செந்தூர் பகுதியில் சவுடு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி கீழ திருச்செந்தூர் கிராமத்தில் உள்ள புல எண் 91/1, 91/2 & 96A/1 ஆகிய பட்டா இடங்களில் சவுடு மணல் அள்ள வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்வதுடன், மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர் மீீீது Tamilnad Mines & Minerals (Development & Regulation) Act 1957-ன் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். மேற்படி பொக்லைன் வாகனங்கள் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் எனவும் இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது பரபரப்பான புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.