ஷ்யாம் நீயூஸ்
19.02.2022
தூத்துக்குடி மாநகராட்சி வேட்பாளர்களும் வாக்காளர்களும் - ஒரு சர்வே
தூத்துக்குடி நகராட்சியாக இருந்த தூத்துக்குடி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்தூரி தங்கம் முதல் மேயர் என்ற ஆசனத்தில் அமர்ந்தார். அதன்பின் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 60வது வார்டுகள் உள்ளடக்கி நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். சில ஆண்டுகளில் மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தேடுக்கப்பட்ட நிலையில் அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அந்தோணிகிரேஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு பேருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதன்பின் பல ஆண்டுகளாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறாமல் அதிகாரிகளின் ஆதிக்கம் நடைபெற்றது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி மன்ற தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 60வார்டுகளிலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்பட அரசியல் கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கி தேர்தலை சந்திக்கின்றனர்.இதில் 60வார்டுகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கிடையே 40க்கும் மேற்பட்ட வார்டுகளில் நேரடி போட்டி நடைபெறுகிறது. இதில் களம் கண்டுள்ள சில சுயேட்சை வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்து கொண்டு வாக்குகளை சேகரித்தது மட்டுமின்றி சில பகுதிகளில் நல்ல முறையில் பணியாற்றியவர்களும் உண்டு. திமுக மேயர் வேட்பாளராக கருதப்படும் ஜெகன் பெரியசாமி, அதிமுக மேயர் வேட்பாளராக கருதப்படும் ராஜா, உள்பட 400க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர்கள் உள்ள மாநகராட்சியில் வெற்றி பெறுபவர்கள் யார்? என்ற பட்டிமன்றம் மாநகர் முழுவதும் ஒளிக்கத் தோன்றியுள்ளது. அதில் எளிதில் சந்திக்கக்கூடிய வேட்பாளர் யார்? என்ற நிலை மக்கள் பார்க்கும் சூழ்நிலையில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் உடன் பிறந்த தம்பி ஜெகன் பெரியசாமி பக்கம் பார்வை அதிகம் தெரிவதாகவும் அதிமுக வேட்பாளர் ராஜா வெற்றி பெற்றாலும் அரியணை ஏறமுடியுமா? என்ற கேள்விக்குறியும் உலா வருகின்றன. ஆளும்கட்சியாக திமுக இருப்பதால் 60 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி திமுக மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் பணியாற்றினார்கள். அதிமுக யாருடனும் கூட்டணி இல்லாமல் தனி மரமாக உலாவந்தனர். மாநிலத்தில் தாங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மத்தியில் உள்ள அதிகாரம் எங்கள் வசம் என்ற இருமாப்புடன் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளும் அளவிற்கு மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இறுதிகட்ட நிலவரத்தில் சில வார்டுகள் ஏற்றத்தாழ்வுகள் உள்ள நிலையிலும் சட்டமன்றத்தில் தனி மெஜாரிட்டியை பெற்று ஆட்சி அமைத்தது போல் தூத்துக்குடி மாநகராட்சியிலும் தனி மெஜாரிட்டியுடன் பொறுப்பேற்கும் என்று திமுக முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.மாநகரில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து இறுதிகட்ட வாக்குப்பதிவை நிறைவு செய்துள்ளனர்.சீர்மிகு முத்துநகர் அரியணை யாருக்கு? என்ற கேள்விக்கு விடை 22ம் தேதி தெரியும்.