ஷ்யாம் நியூஸ்
17.10.2022
திருசெந்தூர் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு _ஆணையர் தகவல்.
திருசெந்தூர் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு சிறப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக அருள்மிகு திருசெந்தூர் முருகன் கோவில் ஆணையர் தெரிவித்துள்ளார்
அவர் தெரிவித்த அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் பாடல் பெற்ற சிறப்பு ஸ்தலம் ஆகும். கந்த சஷ்டி திருவிழா இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற முக்கிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவில் சுமார் 5 இலட்சம் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹார திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் , அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 28.09.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி மூலம் சுமார் 300 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு (Master Plan) பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேற்படி பணி அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து , பணிகள் துவக்கப்பட்டு பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாலும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலனை கருத்தில் கொண்டும் திருக்கோயில் உள்ளே உள்ள உட்பிரகாரம் (பாந்து) இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஆகவே திருக்கோயில் வெளி வளாகத்தில் கந்த சஷ்டி திருவிழாவிற்கு விரதமிருக்கும் பக்தர்கள் தங்கி இளைப்பாற சுமார் 12க்கும் (வசந்த மண்டபம், வேலவன் விடுதி ,கலையரங்கம் பின்புறம், திருமண மண்டபம், திருநீறு மண்டபம், கலையரங்கம் கார் பார்க்கிங், வடக்கு டோல்கேட், திருப்பணி மண்டபம், பேருந்து நிலையம் -2 , பேருந்து நிலையம் உணவுக் கூடம், கிழக்கு கிரி பிரகாரம் ) மேற்பட்ட இடங்களில் தற்காலிக நிழற்கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மேற்கண்ட பணிகள் கந்த சஷ்டி திருவிழா துவங்குவதற்கு முன்பாக நிறைவு செய்யப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் வளாகத்தில் 7 இடங்களில் 237 கழிப்பறை வசதிகள் உள்ளது. மேலும் பாதயாத்திரையாகவும், தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தற்காலிக கழிப்பறைகள் ஆண்களுக்கு 50 எண்ணம் , பெண்களுக்கு 50 எண்ணம் செய்து கொடுக்கப்படும். மேலும் ஆங்காங்கே திருக்கோயில் முறை வரிசைகள் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்துறையில் 21 இடங்களிலும் , வெளிப்பிரகாரத்தில் 26 இடங்களிலும் தன்னார்வ நிறுவனம் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்படி வசதிகளை பக்தர்கள் பயன்படுத்தி தங்கள் விரதங்களை உரிய முறையில் கடைப்பிடித்து திருச்செந்திலாண்டவர் திருவருள் பெற்று செல்ல அன்புடன் வேண்டிக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.