ஷ்யாம் நீயூஸ்
29.06.2022
ஸ்டெர்லைட் விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் மாற்று திறனாளிகள் நல சங்கம் கோரிக்கை
முத்துநகர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் துளசி, பெல், தாயகம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவன நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி பானு பிருந்தாவன் மஹாலில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். தொண்டுநிறுவன நிர்வாகிகள் தனலெட்சுமி, ஜெயக்கனி, ஜேசுதாஸ், மாரியப்பன், முருகன், முருகம்மாள், முத்துலெட்சுமி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர வளர்ச்சி மற்றும் அனைத்துமக்களின் நலனிலும் அக்கறை கொண்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை விற்கும் முடிவினை அதன் உரிமையாளர் கைவிடவேண்டும்.
நடமாடும் மருத்துவ திட்டம், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி திட்டம், பெண் குழந்தைகளுக்கான கல்வி வகுப்பு திட்டம், குஷி குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இதயம் காப்போம் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டம், கிராமங்கள்தோறும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகிய பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்துவரும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படவேண்டும்.
ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அனில்அகர்வால் சட்டத்தின் மூலமாக போராடி வெற்றிபெறுவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். கடந்த 4ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சட்டப்போராட்டத்திற்கு நீதிபதிகள் நல்ல முடிவை தரவேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எங்களுடன் எங்களைப்போன்ற பலஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.
தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை கருத்தில்கொண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் செயல்பட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ரமேஷ் பேசியதாவது, ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானம் இன்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை மாறிடவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திடவும், மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பெருகிடவும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைய திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் காலம்தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
யாரும் செய்யாத உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இதன்காரணமாக பல சட்டவிரோத செயல்கள் நடைபெறும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், படித்த இளைஞர்களுக்கும், இந்த தொழிற்சாலையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திட ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை வேதாந்த குழுமத்தலைவர் அனில்அகர்வால் உடனடியாக கைவிடவேண்டும் என்றார்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேரந்த மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.