21 செப்டம்பர் 2018
சில முக்கிய இந்திய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கலாச்சாரத்தின் வெற்றி" - அமித் ஷா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி நமது கலாச்சாரத்தின் வெற்றியாக இருக்குமென்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
"நமது சமூகத்துக்கு விரைவில் நீதி கொடுக்கப்பட வேண்டும் என்றால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். அதற்கான சரியான பாதையில் நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து சுமார் 600 ஆண்டுகளாக அதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது" என்று அமித் ஷா பேசியுள்ளார்.
இதே விவகாரம் குறித்து கடந்த புதன்கிழமை பேசியிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அயோத்தியில் ராமர் கோயிலை காட்டினால்தான் இந்து-முஸ்லீம்கள் இடையிலான மோதல்போக்கு குறையும்" என்று கூறியதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டுவழிச்சாலை திட்டம்: "உரிய அனுமதியின்றி செயற்படுத்தப்படாது"

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்றால், சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை தொடரமாட்டோம் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டத்துக்கு பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது, மறுபுறம் நிலங்களை உட்பிரிவு செய்தது ஏன்? என்று நீதிபதிகள் மத்திய அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், " மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை மேற்கொண்டு மேற்கொள்ள முடியாது. அதனால், இந்த திட்டத்தை தொடர மாட்டோம்" என்று வெளியிட்டுள்ளது.

கரையை கடந்தது 'டாயே புயல்'

ஒடிசாவில் கோபால்பூர் அருகே வெள்ளிகிழமை காலையில் கரையை கடந்த டாயே புயலால் அந்த மாநிலம் முழுவதும் கடும் மழை பெய்து வருகிறது. மேலும் மிக வேகமான அளவில் காற்று வீசுகிறது .
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வியாழக்கிழமை நள்ளிரவு புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வங்க கடலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது.
மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுவதாகவும், மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.
இந்த புயல் தொடர்பாக ஒடிசா மாநில அரசு முழு அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துள்ளது.

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப் பட்டுள்ளதாகது.
உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில் விசாரணையின்போது, "'எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி திட்டத்தை உருவாக்க வேண் டும். அதற்குரிய நிதியை ஒதுக்கி, வழக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்களை திறக்க வேண்டும்" நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் முதல் தளத்தில் இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது. அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் மூலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் வழக்குகள் மட்டுமே இங்கு விசாரிக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.