தூத்துக்குடி: 19 செப் 2018 தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்
சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
மோகன் பகவத் பேச்சு
"நமது நாடு ஓர் இந்து தேசம் என்று கூறுவதால் அதில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை என்று பொருள் ஆகிவிடாது," என்று புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
"இஸ்லாமியர்கள் வேண்டாம் என்று கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போய்விடும்," என்றும் அவர் அந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு என்பது இந்நாட்டின் மனசாட்சி என்றும், ஆர்.எஸ்.எஸ் அரசியலைப்புக்கு உண்மையானதாக இருக்கிறது என்றும் பகவத் பேசினார்.

ரஃபேல் விவகாரம்
இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதில் மத்திய அரசுக்கு ஏன் தயக்கம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தலைமைத் தணிக்கை அலுவலகம் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை அணுகப் போவதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறியுள்ளார்.

ஹாங்காங் அணியை போராடி வென்ற இந்தியா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த லீக் போட்டியில் ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பு 285 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 127 ரன்கள் எடுத்தார்.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கிய ஹாங்காங் அணி, மிக சிறப்பான தொடக்கத்தை பெற்றது. முதல் விக்கெட்டை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை .
முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு ஹாங்காங் அதிர்ச்சியளித்தது. பின்னர் ஹாங்காங் அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிய, இந்தியா 26 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை மறுபரிசீலனை செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தக்கூடாது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் குழு வரும் 22ஆம் தேதி முதல் ஆலையைப் பார்வையிட முடிவு செய்துள்ளது.

தமிழகத்துக்கு தினமும் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.