எம்.ஜி.ஆர். விழாவுக்கு மு.க. ஸ்டாலின், டிடிவிக்கு அழைப்பு ஏன்?

இம்மாத இறுதியில் சென்னையில் தமிழக அரசு நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்பதாக வெளியாகியுள்ள அழைப்பிதழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் நூற்றாண்டுவிழாவை கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு எல்லா மாவட்டங்களிலும் நடத்திவந்தது. அதன் நிறைவு விழா இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே சென்னையில் நடந்திருக்க வேண்டும். ஆனால், அந்த விழா நடப்பது தொடர்ந்து தள்ளிப்போனது.
இந்த விழா தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு அரசின் ஐம்பதாண்டுப் பொன்விழா என்ற பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று வெளியான இந்த விழாவுக்கான அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி ஆகியோரது பெயரும் அ.தி.முகவுக்குப் போட்டியாக செயல்பட்டுவரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த அழைப்பிதழ் வெளியானதும் சமூக வலைதளங்களில் விவாதமானதோடு தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்தியானது.

இதற்கு முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலகட்டத்தில் சென்னையில் அரசு விழாக்கள் நடைபெற்றாலும் தி.மு.க. உறுப்பினர்களில் பெயர்கள் பெரும்பாலும் இடம்பெற்றதில்லையென்றே சொல்லலாம். ஆனால், இப்போது இந்த நிலை மாறியிருக்கிறது.
இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைப் பொறுத்தவரை, மற்ற மாவட்டங்களில் நடைபெற்றபோதும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றதை அரசு வட்டாரங்களில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த விழாவில் தி.மு.க. பங்கேற்குமா என்பது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவனிடம் பிபிசி கேட்டபோது, "என்னுடைய பெயரும் அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், என்னிடம் இது தொடர்பாகப் பேசவில்லை. விழாவில் கலந்துகொள்வது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். சென்னையில் விழா நடப்பதால் எங்களது பெயர் மரபுரீதியாக இடம்பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார்.

இந்த அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் தி.மு.கவினர் பெயர் இடம்பெற்றதைவிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கடும் மோதலில் ஈடுபட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றிருப்பதுதான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டிடிவி தினகரன் தரப்பில் இந்த அழைப்பிதழ் குறித்துக் கேட்டபோது, தங்களுக்கு இன்னும் அந்த அழைப்பிதழ் வரவில்லையென்றும் வந்தவுடன் கலந்துகொள்வது குறித்து முடிவுசெய்வோம் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, "சென்னையில் இந்த விழா நடப்பதால், சென்னையைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வளவுதான்" என்று கூறி, சலசலப்புக்கு இப்போதைக்கு ஒரு முடிவுகட்டியிருக்கிறார்.