
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் மாதம் 2ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் ஐந்து தினங்களே உள்ள நிலையில், இன்று (செவ்வாய்) ஆரம்பிக்கும் வாரத்தில் மனித உரிமைகள் முதல் பாலின சமத்துவம் வரையிலான பல்வேறு முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை அவர் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இரண்டு அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை தாங்குகிறார். முதலாவது அமர்வு முன்னுள்ள வழக்குகளுக்கு நீதிபதிகள் சிக்ரி, கான்வில்கர், சந்திரசூத், அசோக் பூஷன் ஆகியோருடன் இணைந்தும், இரண்டாவது அமர்வில் ரோஹின்டன் நாரிமன், இந்து மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து தீர்ப்புகளை வழங்க உள்ளார்.
ஆதார்:
ஆதார் சட்டம் குறித்து 38 நாட்களுக்கு தொடர் விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வழக்கிற்கான தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி அறிவித்தது.
'கேஷுவானந்த பாரத்' வழக்குக்கு பிறகு உச்சநீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்கு இதுதான்.

ஆதார் விவர தொகுப்பை உருவாக்கும்போது மக்களிடமிருந்து வாங்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை எதிர்த்து இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டபோது, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு, ஆதார் சட்டத்திலுள்ள கூறுகளை எதிர்த்தும், அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதை மையாக கொண்டும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்நிலையில், ஆதார் அட்டையின் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரத்தை வரையறுக்கும், இந்த வழக்கிற்கான தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான தனியுரிமையின் எல்லைகளையும் இது வரையறுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை பெண்கள் நுழைவுரிமை வழக்கு:

கேரளாவின் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு, விசாரணைகள் முடிவுற்று தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தின் பாரம்பரியம், மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றோடு அரசமைப்பு சட்டப்படி ஒரு பெண்ணின் உரிமையை தீர்மானிக்கும் இந்த வழக்கு மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது.
அதாவது, சபரிமலை கோவிலுக்கு 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, மதரீதியிலான செயல்பாடுகளுக்கு உரிமை அளிக்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 25இன் கீழ் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அணுகுமா அல்லது பாலின அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்யும் அரசமைப்பு சட்டப்பிரிவு 14 மற்றும் 15இன் கீழ் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் அணுகுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு மட்டும் தடை விதிப்பதென்பது தீண்டாமைக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அய்யப்ப பக்தர்கள் தங்களது பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு சட்டப்பிரிவு 26இன் படி உரிமை உள்ளதா என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட அரசியவாதிகளை தகுதிநீக்கம் செய்வது

காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடுவதை தடைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
ஒரு அரசியல்வாதி மீதான குற்றம் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டால் மட்டுமே தகுதிநீக்கம் செய்வதை தற்போதுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அனுமதிக்கிறது.
அரசியவாதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்கு வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுவதாகவும், அதன் காரணமாக அந்த இடைப்பட்ட காலத்தில் குற்றம் இழைத்தவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று அரசாளுவதாக மனுதாரர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அரசியல்வாதிகளை தகுதிநீக்கம் செய்வதற்கு சட்டத்தில் மாற்றங்களை செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்று இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தெரிவித்திருந்தது.
நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புதல்

நீதிமன்ற செயல்பாடுகளை நேரலையாக ஒளிபரப்புவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் செயல்பாடுகளை நேரலையாக ஒளிபரப்புவது, காணொளி பதிவு ஏற்படுவது குறித்த நடைமுறைகளை வரையறுக்கும் இந்த வழக்கிற்கான தீர்ப்பை கடந்த ஆகஸ்டு மாதம் 24ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
நீதிமன்ற செயல்பாடுகளை நேரலையாக ஒளிபரப்புவதை முக்கியமான வழக்குகளில் சோதனை ரீதியில் மேற்கொள்ளலாம் என்றும், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் தலைமை அரசு வழக்கறிஞர் வேணுகோபால் வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.
எம்.பி/ எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞராக செயல்படலாமா?

சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ பதவியில் இருந்துகொண்டே ஒருவர் வழக்கறிஞராகவும் செயல்படலாமா என்பது குறித்த வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி/ எம்.எல்.ஏக்கள் பதவியில் இருந்துகொண்டே வழக்கறிஞராகவும் செயல்படுவதற்கு தடைவிதிப்பதை ஏற்கமுடியாது என்று மத்திய அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருப்பது முழுநேர பணியாக கருதப்படாத சூழ்நிலையில் அவர்கள் வழக்கறிஞராக செயல்படுவதற்கு தடைவிதிக்க முடியாது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுபோன்ற பதவியில் இருப்பவர்கள், வழக்கறிஞராக செயல்படுவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்று பார் கவுன்சில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உறுப்பு சிதைப்பு
முத்தலாக் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தாவூத் போஹ்ரா சமுதாயத்தை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் பெண் உறுப்பு சிதைப்பு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சடங்கை தடைசெய்வதற்கு மத்திய அரசு ஆதரவு அளித்தாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் தங்களது மதரீதியிலான நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று தாவூத் போஹ்ரா சமுதாயத்தினர் கூறுகின்றனர்.

வன்முறையில் ஈடுபடும் அரசியல் கும்பல்களை தடுப்பதற்காக வழிமுறைகள்
போராட்டம் என்ற பெயரில் அரசியல் கும்பல்கள் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் வகையில் அதற்கான வழிமுறைகளை உருவாக்கவுள்ளதாக கடந்த ஆகஸ்டு 10ஆம் தேதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.
வன்முறைகளுக்கெதிரான நடவடிக்கையை எடுப்பதற்கு காவல்துறை தவறிவிட்டதாக மராத்தா இனக்கலவரம், பத்மாவதி திரைப்படம் போன்றவற்றின்போது நடந்த வன்முறைகளை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையின்போது அரசின் தலைமை வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, வன்முறைகளில் ஈடுபடும் கும்பல் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான வழிகாட்டு நெறிகளை வகுக்கவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அடல்ட்ரி:
இந்திய தண்டனைச் சட்டத்தின் 497 பிரிவை மாற்ற வேண்டும் என சிலர் கருதுகின்றனர். இந்த சட்டத்தின்படி, வேறொருவரின் மனைவியுடன் பாலியல் உறவு கொண்ட ஒரு ஆண் மட்டுமே இந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட முடியும். எனவே இந்த சட்டப்பிரிவை இருபாலருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்யா:
அயோத்யா விவகாரத்தில் எம்.இஸ்மாயில் ஃபாரூகி என்பவர் இந்திய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டுமா? என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.