தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU)
26 செப்டம்பர் 2018

26 செப்டம்பர் 2018

ஆதார் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது இருப்பினும் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கோருவது சட்டத்துக்கு புறம்பானது என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளில் ஆதார் செல்லும் என உச்சநீதிம்னறம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆதார் அட்டை பாதுகாப்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மேலும் அது விளிம்பு நிலை மக்களுக்கு பயனளிக்கக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளை பாதுகாக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
"ஆதார் விளிம்பு நிலை மக்களுக்கு மரியாதையை வழங்குகிறது. தனியுரிமையைக்காட்டிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை பெரிசு."என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு
ஆதார் அடையாள அட்டை தொடர்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்திய சட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டசாமி தொடுத்திருந்த வழக்குதான் தனிமனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்பது குறித்த விவாதத்திற்கு வழிவகுத்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன நீதிமன்ற அமர்வு, தனியுரிமை தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 2017ஆம் ஆண்டு வழங்கியது.
அரசியலமைப்பின் 142வது பிரிவின்கீழ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவில் சட்டமாகக் கருதப்படுகிறது, ஆனால் தனியுரிமை குறித்த புதிய சட்டங்களை உருவாக்குவது பற்றி பேசப்படுகிறது. ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது மற்றும் அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து, ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு 38 நாட்கள் விசாரணை செய்தது.