சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பரிசுகள் வழங்கினார்
ஷ்யாம் நீயூஸ்
27.02.2023
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பரிசுகள் வழங்கினார்
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற தலைப்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்.இ.ஆ.ப., வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (27.02.2023) மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புனார்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை எழுதுதல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்.இ.ஆ.ப., வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இயற்கைவளம் நிறைந்த நமது மாநிலத்தின் சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும தடிமன்கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப்பொருட்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர்பைகள் / பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்துவைப்பதற்கும், விநியோகிப்பதற்கும், போக்குவரத்து செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஆகையால், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, ஒவியப்போட்டி மற்றும் கட்டுரை எழுதுதல் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் தலா சிறந்த முதல் மூன்று மாணவர்களின் படைப்புகள் தெரிவுசெய்யப்பட்டு இன்று அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கூ.பொ.) ஜே.ஹேமந்த் ஜோசன், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.