ஷ்யாம் நீயூஸ்
22.01.2024
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டு நிகர இலாபம் ரூ.284 கோடியாக உயர்வு.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டின் நிகர இலாபம் ரூ.284 கோடி ஈட்டியுள்ளது . ஆண்டு நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடியாக உயர்ந்துள்ளதாக மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
547 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிதிநிலை தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்படாத மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஆண்டு நிகரமதிப்பு ரூ.6,741 கோடியிலிருந்து ரூ.7,668 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.426 லிருந்து ரூ.484 ஆக உயர்ந்துள்ளது. 2023-2024 ன் மூன்றாவது காலா
ண்டு நிகர இலாபம் ரூ.280 கோடியிலிருந்து ரூ.284 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடியாக உயர்ந்துள்ளது
சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகை 89 சதவீதத்திலிருந்து 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த வருமானம் ரூ.1173 கோடியிலிருந்து ரூ.1,387 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த வாராக் கடன் 1.70% இலிருந்து 1.69% ஆகக் குறைந்துள்ளது. SMA கணக்குகள், கடன் தொகையில் 8.41% இருந்து 5.34% ஆக குறைந்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 8.87% வளர்ச்சியடைந்து ரூ.85,185 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை ரூ.46,799 கோடி மற்றும் கடன் தொகை ரூ.38,386 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.
நிகர இலாபம் ரூ.284 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.280 கோடியாக இருந்தது.) நிகரமதிப்பு (Net worth) ரூ.7,668 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.6,741 கோடியாக இருந்தது) இது ரூ.927 கோடி உயர்ந்து 13.75 % வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிதி நிலை தனிக்கை அதிகாரி பி.கே. கிருஷ்ணன், பொது மேலாளர்கள் ரமேஷ், சூரிய ராஜ், இன்பமணி, சுந்தரேசன், ஜெயராம், உதவி பொது மேலாளர்கள் அசோக் குமார், பார்ததசாரதி, தலைமை நிர்வாக அதிகாரி ராஜா மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.