தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
25-.03.2019
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் புதிய தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால், பல கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்து வருகின்றனர். இதையடுத்து, தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் இன்று மனுதாக்கல் செய்தார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து எம்.பி, கனிமொழி போட்டியிடுகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் வெற்றிபெற்ற பிறகு நிச்சயமாக இந்த தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை உள்ளது. நீர் மேலாண்மை சரியாக செய்யப்படாததால் பல குளங்கள் தூர்வாரப்படாத நிலையில் உள்ளன. சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சுமார் 10 வருடங்களாக சில கிராமங்கள் உள்ளன. எனவே, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எவ்வித புதிய தொழில்களும் இப்பகுதிக்கு வரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது, ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு போன்றவை காரணமாக ஏற்பட்ட குழப்பங்களால் இங்கு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் இங்கு நான் போட்டியிட்டு வெற்றி பெறும்போது, நிச்சயமாக இப்பகுதிக்கு தொழில் முதலீடுகள் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும், பன்னாட்டு விமானங்கள் வரும் வகையில் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுப்படுத்த நவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலைகளை திமுக அனுமதிக்காது. மீனவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.