SHYAM NEWS
19 நவம்பர் 2018
நம்பகமான தகவல் இல்லாமல் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க முடியாது - பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் #BeyondFakeNews

மிகவும் பிளவுபட்டதாக உள்ள இந்த உலகத்தில் நம்பகமான தகவல்கள் இல்லாமல் எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்க முடியாது என்று பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் தெரிவித்தார்.
'Beyond Fake News' (போலிச் செய்திகளைத் தாண்டி) திட்டத்தின் கீழ் இந்தியாவில் சென்னை உள்ளிட்ட ஏழு நகரங்களில் திங்கள் கிழமை கருத்தரங்குகளை நடத்தும் பிபிசி, தவறான தகவல்கள் ஏன், எப்படி பகிரப்படுகின்றன என்பது குறித்து சொந்தமாக செய்த ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளையும் வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வை ஒட்டி வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் உரையாற்றிய டோனி ஹால் இவ்வாறு பேசினார். அத்துடன் நல்ல இதழியல் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை ஹயாத் ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு கருத்தரங்குகள் நடைபெற்றன. காலையில் நடைபெற்ற முதல் விவாதத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், சூழலியாளர் ஓசை காளிதாஸ், எழுத்தாளர் வாஸந்தி, செயற்பாட்டாளர் பாஸ்கர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிற்பகல் நடைபெற்ற கருத்தரங்கில் நடிகை குஷ்பூ, பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி, ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே மற்றும் மனநல ஆலோசகர் ஷாலினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை கருத்தரங்கில் நடந்த நிகழ்வுகளை நேரலையாக அவ்வப்போது இந்தப் பக்கத்தில் வழங்கி வந்தோம். அந்தப் பதிவுகளை கீழே காணலாம்....
5.05- நிகழ்ச்சி நிறைவை எட்டியது. பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் நன்றியுரை ஆற்றினார். காலை முதல் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி.
5.00 PM: கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை செலவுகள் அனைத்தும் உயர்ந்துள்ளன. ஆனால், செய்தி நுகர்வுக்கான அவர்களது செலவு என்ன? செய்தி நுகர்வுக்கு பணம் செலுத்த விரும்பாத போக்குக்கும் போலிச் செய்திகள் பரவுவதில் பங்கு உண்டு என்றார் பன்னீர்செல்வம்.
4: 48PM பிபிசி நடத்தும் #BeyondFakeNews கருத்தரங்கு குறித்து பேசுகிறார் தி இந்து ரீடர்ஸ் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் பேசுகிறார்.
4:00 #BeyondFakeNews கருத்தரங்கின் இறுதிக்கட்ட நிகழ்வு தொடங்கியது.
எது உண்மையான புகைப்படங்கள், எது போலி என்பதை எப்படி கண்டறிவது என்பது குறித்து விவரிக்கிறார் பேராசிரியர் சுனிதா குப்புசாமி.
3:20 - கடந்த மாதம் போலி செய்திகள் குறித்த பிபிசியின் பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள் போலி செய்திகள் குறித்து தாங்கள் வடிவமைத்த ப்ராஜெக்டை இந்த நிகழ்வில் வெளியிட்டர்கள்.
பிபிசியின் இந்திய மொழிகள் தலைமையகம் இருக்கும் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போலிச் செய்திகள் குறித்த பயிலரங்குகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமல்லாது, சென்னை, அகமதாபாத், அமிர்தசரஸ், புனே மற்றும் விஜயவாடாவில் உள்ள பள்ளிகளிலும் எங்கள் குழு இதனை நடத்தியது. இந்த நான்கு மணி நேர பயிலரங்கத்தில், விளையாடுப் போட்டிகள், வீடியோக்கள், மற்றும் குழு பயிற்சிகளும் இடம்பெற்றன.
ஆங்கிலத்தைத் தவிர தமிழ், ஹிந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் இது நடத்தப்பட்டது. பயிலரங்கத்தின் இறுதியில், மாணவர்கள் போலிச் செய்திகளுக்கான தீர்வை யோசித்து செயல்படவும் ஊக்குவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில், போலிச் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தும் வகையில், மாணவர்கள் போஸ்டர்கள், சுவர் ஓவியங்கள், இசை ஆகியவற்றை தயாரித்தனர்.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் #BeyondFakeNews கருத்தரங்கில் மாணவர்கள் செய்த ப்ராஜெக்ட்டை அவர்கள் விவரித்தார்கள். போலிச் செய்திகள் என்றால் என்ன அதனை எப்படி தடுப்பது என்பதை தெரிந்து கொண்டோம் என பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். போலிச் செய்திகளை தடுப்பதற்கான தீர்வை அவர்கள் காட்சிப்படுத்தினர்.
3:30 - போலிச் செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வில்லுப்பாட்டு பாடும் மாணவர்கள்


மாட்டுக்கறி தடை
1:30 - பிபிசி #BeyondFakeNews நிகழ்ச்சி உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. இந்த கருத்தரங்கில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு, பா.ஜ.கவின் நாராயண திருப்பதி மற்றும் ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது பேசிய குஷ்பு, "செய்திகளை படிக்கும்போது, நாம் அதில் மனதை செலுத்துவதில்லை. அது மிகவும் முக்கியம்" என்றார்.
நாராயணன் திருப்பதி பேசுகையில், "போலிச் செய்திகள் அரசியல்வாதிகளிடம் இருந்துதான் உதயமாகிறது. அதனால் சமூக மற்றும் அரசியல் பதற்றம் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. மாட்டுக்கறி தடை விஷயத்தில், அதன் பின் இருந்த நோக்கம் மறைக்கப்பட்டு, தவறாக சித்தரிக்கப்பட்டது. இதில் ஊடகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன."


மீண்டும் பேசிய குஷ்பு, "போலிச் செய்திகளால் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு இடத்தில் உதவி தேவைப்படுகிறது என, உண்மையான செய்தி வந்தாலும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது" என்றார்.
நாராயணன் : போலிச் செய்திகளை தடுக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தொலைக்காட்சி ஊடகங்கள் பெரிதும் சமூக ஊடகங்களை நம்பி இருப்பதனால் போலி செய்திகள் அதிகம் பகிரப்படுகின்றன.

பாண்டே: சமூக ஊடகங்களை நம்பி தொலைக்காட்சி இருக்கிறது என்பதை ஏற்க முடியாது. போலிச் செய்திகள் பிரச்சனை செய்தித்தாள்களிலும் இருக்கிறது. செய்தியை செய்தியாக பார்க்க வேண்டும். வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவது முக்கியம். நிதானம் வேண்டும்.
குஷ்பு : வதந்திகளுக்கு போலி செய்திகள் என்ற புதிய பெயரை நாம் தற்போது கொடுத்துள்ளோம். செய்தியின் ஆதாரங்களை செய்தியில் குறிப்பிட இயலாத பட்சத்தில் ஏன் ஒரு செய்தியை வெளியிடுவதை தவிர்ப்பதில்லை?

பாண்டே : பல சமயங்கள் ஆதராங்களை சொல்ல முடியாத நிலைமை இருக்கும். அதனை தவிர்க்க முடியாது.
ஷாலினி : ஒருவர் கதை கேட்க அதிக சுவாரஸ்யம் காட்டுவதால், மற்றவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிவு இருக்காது. சிலர் எதைக் கொடுத்தாலும் க்ளிக் செய்து படிப்பார்கள்.
பாண்டே : வாட்ஸ் ஆப்பில் செய்தியின் ஆதாரம் எது எங்கிருந்து தொடங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள வழி வேண்டும். ஃபார்வார்ட் செய்திகள் அதிகமாக வலம் வருகின்றன. இதெல்லாம் நமக்கு இலவசமாக கிடைக்கிறது. ஒரு செய்தியை ஃபார்வார்ட் செய்ய 10 அல்லது 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயுங்கள், ஒரு ஃபார்வார்ட் செய்திகூட வராது.
ஷாலினி : குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் குரூப்பில் கண்ட செய்திகள் வரும். நம் நெறிமுறைகள் தரை மட்டமாக உள்ளன. ஒரு நடிகை குறித்து தரைக்குறைவாக எழுதுகிறார்கள். நாம் தகுந்த முறையில் செயல்பட வேண்டும்.
பாண்டே : "எல்லா பொய்களிலும் ஒரு உண்மை இருக்கிறது என்று ஒரு படத்தில் வரும். நாம் என்ன செய்கிறோம். பொய்யில் கொஞ்சம் உண்மையை கலந்து விடுகிறோம். போலிச் செய்திகளை புறக்கணிப்பதுதான் சரியான விஷயம். தமிழ்நாடு, பேசி பேசி வீணாகி கொண்டிருக்கக்கூடிய மாநிலம்.
தனி மனிதர்களாக உங்களுக்கு ஒரு செய்தி வந்தால், உங்களுக்கு யார் சொன்னார்கள் என்று கேட்டுப் பழக வேண்டும். வாய்க்கு வந்த செய்தியை பரப்புவதை தனி மனிதர்களும், நிறுவனமும் தவிர்க்க வேண்டும்.

தனி மனிதன் மற்றும் நிறுவனங்கள் திருந்தாமல் சமூகம் திருந்தாது.
யார் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்களோ அவர்கள் தான் அதற்கு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்."
“அதே மாதிரி சட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் அப்பாற்பட்டவர்கள் கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஊடகத்திற்கும் முழு பொறுப்பு உண்டு.
எழுதுகிற ஒவ்வொரு செய்திக்கும் எழுதுகிறவர்கள் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் போலிச் செய்திகளை கட்டுப்படுத்த முடியும்.
குஷ்பூ : “நான் பா.ஜ.கவில் சேரப் போகிறேன் என்று ஒரு காலத்தில் செய்தி பரவியது. சமீபத்தில் இன்னும் தொடங்கப்படாத ரஜினி கட்சியில் சேர்கிறேன் என்று சொன்னார்கள்.
நான் அதிகமாக சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி வந்தேன். எவ்வளவு எதிர்மைறையான விஷயங்கள். பிறகு, நான் ஒரு மாதம் ட்விட்டரில் இருந்து வெளியே வந்தேன். நமக்கு சுயக்கட்டுப்பாடு வேண்டும்.
ஃபார்வர்ட் செய்திகைளை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதனால் உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் குடும்பத்தைப் பற்றி ஒரு தவறான செய்தி வந்தால் அதனை பரப்புவீர்களா?
இது பா.ஜ.க. அல்லது காங்கிரசுக்கான பிரச்சனை இல்லை. இது ஒட்டுமொத்தப் பிரச்சனை. போலிச் செய்திகளுக்கும் வேண்டுமென்றே பரப்பக்கூடிய செய்திகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.”
திருப்பதி : சாட் செய்வது தனி மனித உரிமை. தேசத்தை மற்றவர்களை எது பாதிக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். வெறுப்பு இருந்தால் எது வேண்டுமானால் சொல்லலாம் என்று தற்போதைய சூழல் இருக்கிறது. பா.ஜ.கவை பொறுத்த வரை, அனைத்து மாநிலங்களிலும் சமூக ஊடக கூட்டங்களிலும், தவறான கருத்துகளை பதிவிடக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. போலிச் செய்திகளை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
அப்போது குறிக்கிட்ட பாண்டே, ஜோசஃப் விஜய் விவகாரத்தை பற்றி குறிப்பிட்டார்.
திருப்பதி: ஜோசஃப் விஜய் விஷயம் தவறான செய்தி அல்ல. அவர் உண்மையான பெயரே அதுதான்.
பாண்டே : சம்பந்தம் இல்லாத விஷயத்தில், சம்பந்தம் இல்லாத தருணத்தில் பேசுவதால் அதற்கு ஒரு உள்நோக்கம் உருவாகிறது.
குஷ்பூ: விஜய்க்கு நான் ஆதரவளித்ததால் நான் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.


12:20: சென்னையை சேர்ந்த தியேட்டர் நிஷா என்கிற நாடகக் குழு, போலிச் செய்திகளின் மூலாதாரத்தையும் அதன் வகைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஒரு குறு நாடக வடிவில் வழங்குகிறது.

இதில் பங்கேற்ற கலைஞர்கள்: கார்த்திக் கௌரிஷங்கர், விஷ்வ பரத், சக்தி, ஷிவாங்கி சிங், அபர்ணா குமார், ரோஷினி ஸ்ரீதர், நிவேதிதா வெங்கடேசன், மித்ரா விஸ்வேஷ், மீரா சீதாராம். இயக்கம்: பாலகிருஷ்ணன்.

11:50 - பிபிசியின் #BeyondFakeNews கருத்தரங்கில் 'போலி செய்தி: தாக்கமும், தீர்வும்' அறிக்கையை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் ஜெயந்த் முரளி வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் உள்ள முக்கிய விஷயங்கள்:
போலிச் செய்திகளுக்கு கண்கவரும் வகையில் தலைப்புகள் வைக்கப்படுகின்றன. அதனை க்ளிக் செய்யும்போது அவற்றை உருவாக்கியவர்கள் அதற்கு பணம் பெறுவார்கள்.
உண்மை எது போலி எது என்பதை ஃபேஸ்புக், கூகுள் போன்ற தளங்களால் கண்டறிய முடியாது.
டிரம்புக்கு ஆதரவாக பரப்பப்படும் செய்திகள் பலவும் மாஸிடோனிய இளைஞர்களால் பரப்பப்படுவது ஆகும்.
வாக்காளர்கள் உண்மைச் செய்திகளை விட, அதிக போலிச் செய்திகளையே எதிர்கொள்கிறார்கள்.
போலிச் செய்திகளை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்தும் பேசப்பட்டது.

ஹைதராபாத்தில் நடந்த பிபிசியின் #BeyondFakeNews நிகழ்ச்சியில் மஹாபாரதத்தில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக கிருஷ்ணன் பரப்பிய பொய்யால் துயருற்ற துரோணரை பாண்டவர்கள் கொன்றனர். இது மஹாபாரதப் போரின் போக்கை மாற்றிய முக்கிய நிகழ்வு என்று குறிப்பிட்டார் மத்திய தகவல் ஆணையாளர் மாடபூஷி.
விரிவாகப் படிக்க:மஹாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் உள்ளன: மத்திய தகவல் ஆணையர்


போலிச் செய்தியை கண்டுபிடிக்க:
- ஆதாரம் என்ன என்பதைப் பாருங்கள்.
- என்ன தேதியில் செய்தி வந்துள்ளது?
- யார் எழுதியது?
- ஒருதலைபட்சமாக இருக்கிறதா?
- வல்லுநர்களிடம் கேளுங்கள்
- விளையாட்டுக்காக அனுப்பப்பட்ட செய்தியா என்று பாருங்கள்.

உண்மை சரிபார்க்கும் இணையதளங்கள்Snopes.com, Factcheck.org மூலம் நீங்கள் படிக்கும் செய்தி உண்மையா இல்லையா என்பதை தெரிந் கொள்ளலாம். கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள், போலிச் செய்திகளுக்கு எதிரான வழிமுறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

விருந்தினர்களின் விவாதம்

11: 05
வாஸந்தி: போலிச் செய்தியை, நிஜமான செய்தி என்று கருதும் வாய்ப்பும் உள்ளது. உதாரணமாக, பிள்ளைக் கடத்தல் விவகாரம். அந்தப் போக்கு மிகவும் அபாயகரமானது.
பிரகாஷ் ராஜ் : ஒருங்கிணைந்த முறையில் போலிச் செய்தியை பரப்புகிறார்கள். அதைத் தடுக்க ஒரு சமூகமாக நாம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்கர் பாரதி குறிப்பிட்டதை போல, வன உயிரியல் பகுதியில் புலிகள் வேட்டை தொடர்பாக சில வதந்திகள் பரப்பப்படுகின்றன. மக்களின் அறியாமையை அந்த நபர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆதிகாலம் முதலே போலிச் செய்தியை பயன்படுத்தும் நிலை உள்ளது. ஊடகமோ, சமூக ஆர்வலர்களோ ஒருங்கிணைந்து ஒரு குழுவாக இணைய வேண்டும். பிபிசி போன்ற அமைப்புகள், இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால்தான் இப்போது இதில் தலையிடுவதாக நான் பார்க்கிறேன். இந்த போலிச் செய்திகள் நமது வாழ்வில் இடையூறு விளைவிக்கின்றன.

பிரகாஷ் ராஜ் : ட்விட்டரில் எனக்கு ஒரே நேரத்தில் 300, 400 தகவல்கள் வரும். அதை பதிவிடுவோர் சரியானவரா, எப்போது முதல் தகவல்களை பரப்பி வருகிறார் போன்ற விவரங்களை சரிபார்த்து அவருக்கு பதிலளிக்கவே என்னிடம் ஒரு குழு உள்ளது. ஆனால், எல்லோரிடமும் அதுபோல இருக்காது. அந்த அளவுக்கு ஒரு தவறான தகவலை பிறர் மனதில் பதிவு செய்ய ஒருங்கிணைந்த செயல்பாடு மூலம் போலிச் செய்திகளை பரப்புகிறார்கள். பொய் மிகவும் அழகான விஷயம். பிறரை நம்ப வைக்கும் தன்மை அதனிடம் உள்ளது. மனித மனமும் ஒரு பக்குவத்தைக் கொண்டிருக்கிறது. அது தனக்கு பிடித்ததை மட்டுமே நம்பும்.



ரூ. 3,000 கோடி செலவில் ஒரு மிக உயரமான சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதுதான் உனது அடையாளம், கலாசாரம் என்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு நோக்கம் இருக்கிறது. இதைத் தட்டிக் கேட்பதால் என்னை இந்து எதிர்ப்பாளர் என்கிறார்கள். நாளிதழில், பதினாறு வயதுக்கு குறைந்தவர்கள் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதாக வந்த செய்தியை, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆன் பாகிஸ்தான்' என்ற ஆபத்தான வரியை பயன்படுத்தி செய்தி பரப்புகிறார்கள்.
பாஸ்கர் பாரதி : எனக்கு சில விவகாரங்களில் சில நம்பிக்கைகள் இருக்கும். மற்றவர்களுக்கு வேறு விஷயங்களில் நம்பிக்கை இருக்கும். ஜனநாயக நாட்டில் ஒருவர் தவறாக கூறிய வார்த்தையை தவறு என்று நிரூபிக்க வேண்டும். போலிச் செய்தி என்பது அது அல்ல. உண்மை இல்லாததை இதுதான் உண்மை என்று திணிக்கும் செயல்பாடு. அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த போலிச் செய்தி என்பது அழியக் கூடியது அல்ல. அது ஆரோக்கியமற்றது. இவ்வாறாக விவாதம் நடைபெற்றது



'போலிச் செய்தி' என்ற சொல்லாடல் எப்போது தொடங்கியது?
போலிச் செய்திகள் என்ற சொல் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அப்படி என்றால் என்ன?
போலிச் செய்திகள் என்ற பதத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
விரிவாக படிக்க:'போலிச் செய்தி’ என்ற சொல்லாடல் எப்போது தொடங்கியது?

வைரல் செய்தி

11: 25
பிரகாஷ் ராஜ் : இன்று இந்தியாவில் நமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை போலிச் செய்தியால் விளைகிறது. போலிச் செய்தியை பகிர்பவருக்கும் தான் அனுப்புவது போலிச் செய்தி என்பது தெரிந்தே அனுப்புகிறார்.
ஆசிரியர் தங்கவேல்: இதுபோன்ற போலிச் செய்திகள் ஜனநாயகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? வாஸந்தி : சமூகத்தில் நலிவடைந்த சமூகத்தை இலக்காகக் கொண்டு, அவர்களிடையே தாக்கத்தை ஏற்பத்தும் வகையில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. தேர்தல் காலத்தில் அவை முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.பாஸ்கர் பாரதி : கல்வி பெருகி வருகிறது, அறிவு சுருங்கி வருகிறது என்பதைதான் இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.

11: 18
பார்வையாளர் கேள்வி: முன்பு செய்தி வைரலானது. இப்போது வைரலானதை செய்தியாக்குகிறோம். இதை ஒழுங்கமைக்கும் அழுத்தத்தை அரசும் நாமும் தர வேண்டும்.

பிரகாஷ் ராஜ் - யோசனை நன்றாக இருக்கிறது. ஆனால், அந்த ஆதரவை அரசு தரப்புதான் தர வேண்டும்.

நிரூபித்தால் நீர்த்துப் போய் விடும்
10:55 - செயற்பாட்டாளர் பாஸ்கர் பாரதி பேசும்போது, "நம்பிக்கைதான் போலிச் செய்திகளின் அடிப்படை. இதைத் தகர்க்க நாம் என்ன செய்துள்ளோம்? எந்த ஒரு போலிச் செய்தி வந்தாலும், அதற்கு எதிராக நாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.

போலிச் செய்திகள் நம்மைக் கடந்து செல்ல அனுமதிக்கிறோம். சென்னை பெருவெள்ளத்தில் சிக்கியபோது, அதில் பலரும் தத்தளிப்பதாக தகவல் வெளியானது. உடனே மீட்புக் குழுவினர் அந்த செய்தியை நம்பி நேரில் சென்று பார்த்தபோது அப்படி யாரும் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. இது பற்றிய தகவல் உடனடியாக செய்தித் தொலைக்காட்சிகள் மூலம் தெரிவிக்கப்பட்டபோது. போலிச் செய்தி பரவல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு மெல்ல, மெல்ல போலியான செய்திகள் மீதான கவனம் குறைந்தது. உண்மை என்று கருதும் வரை தான் போலிச் செய்திகளுக்கு மரியாதை. போலிச் செய்தியைத் தடுப்பது என்பதை விட, அது போலிச் செய்தி என்று நிரூபித்தால் போதும் அது நீர்த்துப் போய் விடும்.” என்றார்.

ஊட்டி அருகே அணை
10:47 - போலிச் செய்திகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சூழலியாளர் ஓசை காளிதாஸ் பேசுகையில், "போலிச் செய்திகள், நாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உண்மைச் செய்தி போல தெரியும், உதாரணமாக, ஊட்டி அருகே அணை கட்டப்படுவதாகவும் அது கட்டப்பட்டு விட்டால், காவிரி நீர் கர்நாடகாவிற்கு செல்லாது என்றும் ஒரு செய்தி சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டது. மீத்தேன், அணை பிரச்சனை என்று பல தகவல்கள் சமூக ஊடகத்தில் பரப்பப்படுகின்றன. இதேபோல, வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாகவும் அவற்றை இடம் மாற்றுவது தொடர்பாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. யானைக்கு மயக்க ஊசி போட்டதால் அது கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. நமக்கு அக்கறை யானையை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். இதுபோல புலியை மனிதன் கொன்று விட்டான் என்பது போலவும் ஊட்டி அருகே ஐந்து தலை பாம்பு தோன்றியது போலவும் தகவல் பரப்பப்படுகின்றன.” என்றார்.



கலாம் மரணித்த வதந்தி

10:42 - வாஸந்தியை தொடர்ந்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், "நமது சமூகத்தில் போலிச் செய்திகளை உள்வாங்குவது, அதை பரவச் செய்வது போன்ற போக்கு நீண்ட காலமாகவே உள்ளது. எனது மனைவி திடீரென்று அப்துல் கலாம் மறைந்து விட்டார் என்ற தகவலை எங்களில் பலருக்கும் பரப்பினார். ஆனால், கலாம் அப்போது எனக்கு அறிமுகமானவர் என்பதால் அவர் அப்போது உயிருடன் இருப்பதை சரிபார்க்க என்னால் முடிந்தது. உடனே எனது மனைவியிடம் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டபோது, நமக்கு கிடைத்த தகவலை உடனே பரப்பி விடலாமே என்றார். அதற்கு நான், உனது செய்கையின் விளைவு தெரியுமா, அது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றேன்.
மனிதர்களுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால், நமக்கு கிடைக்கும் தகவலை சரியா, தவறா என்பது விவாதிப்பது மட்டுமின்றி அது சரியானதுதான் என்பதை நிரூபிக்கக் கூடிய நிலையில் நாம் இருக்க வேண்டும். இன்றைக்கு போலிச் செய்திகளை மி்கவும் ஒழுங்குமுறைப்படுத்தி பரப்புகிறார்கள். மனிதர்கள், தங்களுக்கு வசதியாக இருப்பதை நம்பி விடுவார்கள்" என்றார்.
மேலும் அவர், "போலிச் செய்தியை ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் போக்கு இருப்பதால் அதை ஒடுக்க விரிவாக, தெளிவாக விவாதிக்க வேண்டும். மறதி நிலையை நோக்கிய நிலையை இன்றைய சமூகம் அடைகிறது. தகவலை அப்படியே நம்பும் போக்கு அதிகரிப்பதால் அதை எதிர்கொள்ளக் கூடிய விவாதம் நடக்க வேண்டும்." என்றார்.



கேள்வி கேட்பதுதான் இந்தியர்களின் மரபு
10:36 - கருத்தரங்கில் பேசிய வாஸந்தி, "சரியான மற்றும் மோசமான கால கட்டங்கள், சம அளவில் நிலவும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அறிவுத்திறனை எல்லாம் நாசமாக்கும் வகையில் தற்போதைய தொழில்நுட்பத்தின் மற்றொரு முகம் பயன்படுத்தப்படுகிறது. ஊடகத் துறையில் போதிய அனுபவமின்றி அந்த மொழியில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும் என்று நினைத்துப் பலரும் பணியில் சேருகிறார்கள்.
பத்திரிகை துறையில் பணியாற்றவும் அடிப்படை பயிற்சி அவசியமாகிறது. சேகரிக்கும் தகவல்களை சரிபார்க்கும் நுட்பத்தை புரிந்து கொண்டு சமூகத்துக்கு சரியான தகவல்களை மட்டுமே தர வேண்டும். ஆனால், இன்றைய கால கட்டத்தில் தவறான தகவல்களை சரிபார்க்காமல் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "மேற்கு நாடுகளில், போலிச் செய்திகளை சரிபார்க்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவெளியில், பொது மேடையில் கிடைக்கும் தகவல்களை படிப்பவர்கள், அதை சரிபார்க்காமல் அப்படியே நம்பி விடுகிறார்கள். அமார்த்தியா சென் எழுதிய 'தி ஆர்குமென்டேட்டிவ் இந்தியன்' என்ற புத்தகத்தில் கேள்வி கேட்பதுதான் இந்தியர்களின் மரபு என்றார். ஆனால், அந்த கேள்வி கேட்புத் தன்மை இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டது. மனித நேயம் என்பதே நாட்டை விட்டுப் போய் மீண்டும் கற்காலத்துக்கு சென்று விட்டோமா என்பதை உணர முடியாத அளவுக்கு, பொது இடத்தில் தவறான தகவல்களை நம்பி பிறரை தாக்கும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது" என்றார்.

வாட்ஸ் ஆப் வதந்தி, அதவாது போலிச் செய்தி ஒரு தனிமனிதனின், குடும்பத்தின் கனவை சிதைத்திருக்கிறது.
உற்சாகமாக தொடங்கிய ஒரு வார இறுதி சுற்றுலாப் பயணம் மிக துன்பமாக முடிந்திருக்கிறது. ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் முகமது அசாமும், அவரது ஐந்து நண்பர்களும் சுற்றுலாவுக்கு திட்டமிட்டபோது அந்த பயணம் இப்படி முடியும் என்று நிச்சயம் அவர்கள் யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.
குழந்தை கடத்தல் தொடர்பான ஒரு வாட்ஸ ஆப் புரளி அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் என்று நினைத்து பார்த்து இருக்கமாட்டார்கள். ஆம், ஒரு வாட்ஸ் ஆப் புரளி மரணத்தில் முடிந்து இருக்கிறது. முகமது அசாம் கொல்லப்பட்டு இருக்கிறார்.
விரிவாக படிக்க:‘துயரத்தில் முடிந்த சுற்றுலா பயணம்’: வாட்ஸ் ஆப் படுகொலை



10:35 - உண்மைச் செய்திக்கும், போலிச் செய்திக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? என்ற தலைப்பில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளார்கள். இந்த அரங்கில் நடிகர் பிரகாஷ் ராஜ், ஊடகவியலாளர் வாஸந்தி, சூழலியலாளர் ஓசை காளிதாஸ், செயற்பாட்டாளர் பாஸ்கர் பாரதி ஆகியோர் அடங்கியோர் இடம்பெற்றுள்ளனர்.
10:30 - விருந்தினர்கள் பிரகாஷ் ராஜ், வாசந்தி, சூழலியாளர் காளிதாஸ், பாஸ்கர் பாரதி ஆகியோரை மேடைக்கு அழைத்தார் பிபிசி ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி.

10:16- பிபிசி அறிக்கையின் சாராம்சத்தை விளக்குகிறார் பிபிசி தமிழ் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி.
அவர் பேசுகையில், "சாதாரண மக்கள் ஏன் எப்படி போலிச் செய்திகளை பரப்புகிறார்கள் என்பதை ஆய்வு செய்தோம். தலைப்புகளை மட்டுமே பலர் படிக்கிறார்கள் என்பது இதில் தெரிய வந்துள்ளது. ஒரு செய்தி உண்மையா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள யாரும் முயற்சி எடுக்கவில்லை. மேலும் உறவினர்கள் ஒரு செய்தியைப் பகிர்ந்தால் அதை மக்கள் அதிகம் நம்புகிறார்கள்.
சென்னையை சேர்ந்த 62 வயது வழக்கறிஞர், மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தகவல்களை எனது சக வழக்கறிஞருடன் நான் பகிர்வதில்லை. எனக்கு நெருக்கமான உறவினர்களிடம் மட்டும்தான் பகிர்கிறேன் என்கிறார்.
குறிப்பாக, தகவல்களின் மூலம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இந்தியாவில் இந்தப் போக்கு அதிகமாக இருக்கிறது.ஆனால், ஆப்பிரிக்காவில் நிலைமை அப்படி இல்லை. அங்குள்ளவர்கள், தகவல்களின் மூலத்தை அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில், வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்திய ஃபார்வர்ட் அம்சம், போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் எந்த வகையிலும் பயன் தரவில்லை.
போலிச் செய்திகள், அரசியல் கட்சிகளுடன் நெருக்கமாக தொடர்புடையவை ஆக கருதப்படுகின்றன" என்றார்.

10:14 - மேடைக்கு வந்த நடிகர் பிரகாஷ் ராஜ் போலிச் செய்திகள் எப்படி, யாரால் பகிரப்படுகின்றன என்பது குறித்த பிபிசி தயாரித்த அய்வறிக்கையை வெளியிட்டார்.
- அறிக்கையைப் பற்றிசுருக்கமாகப் படிக்க: தேசியவாதத்தின் பெயரால் பரப்பப்படும் போலிச் செய்திகள் #BeyondFakeNews





10:06- பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி நிகழ்ச்சி பேச்சு.
10:01 - பிபிசியின் #BeyondFakeNews நிகழ்ச்சி தொடங்கியது. தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரவிஷங்கர் இன்றை நிகழ்ச்சி குறித்த அறிமுகத்தை செய்து, விருந்தினர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்றார்

உலகம் முழுவதும் தவறான தகவல்களால் அரசியல் மற்றும் சமூக ரீதியான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் செய்திகளில் மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். சில நேரங்களில் இத்தகைய தவறான தகவல்களால் வன்முறையும், உயிரிழப்பும் ஏற்படுகின்றன.

பிபிசி-யின் Beyond Fake News திட்டம் தவறான தகவல் பரவுவதை எதிர்த்துப் போராடத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலும், கென்யாவிலும் உலகளாவிய ஊடக அறிவூட்டல், குழு விவாதம், இப்பிரச்சினைக்கு தொழில்நுட்பத் தீர்வு காண்பதற்கான ஹேக்கத்தான் எனப்படும் கணினித் துறை வல்லுநர்கள் கூட்டம், ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசியா பசிபிக், ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பிபிசி ஊடகங்களில் வெளியாகும் சிறப்புத் தொடர் நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இந்தியா, கென்யா, நைஜீரியா ஆகிய நாடுகளில் மறையாக்கம் செய்யப்பட்ட தங்கள் தகவல் செயலிகளைப் பார்ப்பதற்கு பயனர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பிபிசிக்கு அனுமதி அளித்ததன் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை
பிபிசி உலக சேவை குழுமத்தின் இயக்குநர் ஜெமி ஆங்கஸ் கூறுகிறார்: "போலிச் செய்தி அச்சுறுத்தல் குறித்து வெறுமனே பேசிக்கொண்டிராமல், அதை எதிர்கொள்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை பிபிசி உலக சேவைக் குழுமம் எடுக்கும் என்று 2018ல் நான் உறுதி அளித்தேன். உலக அளவில் ஊடக அறிவு மலிந்த தரத்தில் இருப்பதாலும், டிஜிட்டல் தளங்களில் எளிதாக போலியான தகவல்கள் தடுக்க முடியாதபடி பரவுவதாலும் நம்பகமான ஊடக நிறுவனங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது இப்போது மிக அவசியம்.

பிபிசியின் செயலாக்கம் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம், இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், களத்தில் மெய்யான நடவடிக்கைகளில் எங்கள் பணத்தை செலவிடுகிறோம்.

வாட்ஸ் ஆப் படுகொலைகளை இந்தியாவில் தடுப்பது யார்?
வாட்ஸ் அப்பில் வேகமாக பரவும் சில செய்திகள் படுகொலைக்கு காரணமாகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்திய அரசு இதனை தடுக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும்படி வாட்ஸ் அப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
விரிவாக படிக்க:வாட்ஸ் ஆப் படுகொலைகளை இந்தியாவில் தடுப்பது யார்?

Beyond Fake News காலம்

ஒரு செய்தி போலியா அல்லது நிஜமானதா, உண்மையா அல்லது பொய்யா, வெளிப்படையானதா அல்லது தவறாக வழிநடத்துகிறதா? - நாம் எப்படி வித்தியாசம் காண்பது? மேலும் உங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த என்ன செய்யலாம்? இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து Beyond Fake News திட்டத்தில் பிபிசி ஆராய்ச்சி மேற்கொண்டது. வாட்ஸ் ஆப் செயலி ஒரு இந்திய கிராமத்தை கொலைகார கும்பலாக மாற்றியபோது என்ன ஆனது என்பது குறித்த ஆழமான புரிதல் கொண்ட செய்தியும் இதில் அடங்கும். உலகெங்கிலும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தில் வெளியான நிபுணத்துவம் பெற்ற பிபிசி செய்தியாளர்களின் செய்திகளும் இதில் அடங்கும்.