சிபிஐ இயக்குனரின் வழக்கில் பரபரப்பு.. அறிக்கை விவரங்கள் கசிந்ததால் விசாரணை ஒத்திவைப்பு!
கடந்த வாரம் 12ம் தேதி சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா குறித்து விஜிலன்ஸ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த விசாரணை அறிக்கை மீதான பதில் மனுவை நேற்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்தார்.
முதலில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா நேற்று இந்த மனுவை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து பதில் மனுவை நேற்று மாலை அவர் தாக்கல் செய்தார்.
என்ன பிரச்சனை
குஜராத்தை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார். இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்கு தாக்கல்
இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் உத்தரவின் பேரில் சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அதே சமயம் அலோக் வெர்மா மீது ராகேஷ் அஸ்தானா ஊழல் லஞ்ச புகார் அளித்தார். லாலு பிரசாத் வழக்கில் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிட்டார்.
மோதல் வழக்கு
இதனால் சிபிஐ அமைப்பிற்குள் அதிகார மோதல் ஏற்பட்டது. உடனே தலையிட்ட மத்திய அரசு சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பித்தது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ பொறுப்பு இயக்குனராக செயல்படுவார். இந்த கட்டாய விடுப்பிற்கு எதிராக இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில்தான் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
கமிட்டி அறிக்கை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 2 வாரம் முன் இதற்காக விசாரணை கமிட்டி அமைத்தார். அலோக் வெர்மாவிற்கு எதிராக அஸ்தானா வைக்கும் புகார்கள் உண்மையா, மத்திய அரசின் நடவடிக்கை சரியா என்று அறிக்கை தாக்கல் செய்ய கூறினார். விஜிலென்ஸ் கமிஷன் உறுப்பினர்களை கொண்ட விசாரணை கமிட்டியை அமைத்தார். இவர்கள் வழங்கிய விசாரணை அறிக்கையை முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏகே பட்நாயக் சோதனை செய்தார்.
அறிக்கை தாக்கல்
இந்த விஜிலன்ஸ் அறிக்கை கடந்த நவம்பர் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்கே கவுல் அமர்வு சோதனை செய்தனர். இதில் அலோக் வெர்மாவிற்கு சாதகமாகவும், எதிராகவும், நடுநிலையாகவும் நிறைய கருத்துக்கள் இருப்பதாக நீதிபதிகள் கூறினார்கள்.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த விசாரணை அறிக்கை மீதான பதில் மனுவை நேற்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்தார். இந்த பதில் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஆனால் விசாரணை தொடங்கிய 15 நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது. சிபிஐ இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனு குறித்த விவரங்கள் ஊடகங்களில் கசிந்த காரணத்தால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இரண்டு தரப்பிற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.நவம்பர் 29ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.