சி.பி.ஐ-இல் விலகும் திரை: மோதலும் பின்னணியும்
SHYAM NEWS
24.10.2018

இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் மூத்த பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகள் இடையே உண்டாகியுள்ள அதிகாரபோட்டியால், அதன் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருமே தற்போது விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ, அதாவது மத்திய புலனாய்வு முகமை, ஊழல் பற்றி விசாரணை செய்யும் இந்திய அரசின் முக்கியமான நிறுவனமாகும். சிபிஐ என்றாலே மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படும், அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் அமைப்பு என்ற பொதுக்கருத்தும் நிலவுகிறது.
'கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிபிஐ அமைப்பு இருக்கிறது. சிபிஐக்கு இருக்கும் ஏராளமான எஜமானர்கள் சொல்வதைச் சொல்லுகின்ற கிளிப் பிள்ளையாக இருக்கிறது' என உச்சநீதிமன்றம் ஒரு சந்தர்ப்பத்தில் சிபிஐ-யை சாடியிருந்தது
துரதிருஷ்டவசமாக, தற்போது சிபிஐ சிக்கித் தவிப்பது அரசியல் ஆயுதங்களினால் அல்ல. தனது அதிகாரிகளிடேயே ஏற்பட்டுள்ள மோதலில், அவர்களின் முகமூடி கிழிந்ததால், விவாதப் பொருளாகியிருக்கிறது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் அதன் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையேயான பிரச்சனையால், நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வரலாற்றிலேயே முதன்முறையாக, சிபிஐ தனது சொந்த அலுவகத்திலேயே திங்கட்கிழமையன்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில், டி.எஸ்.பி தேவேந்தர் குமார் ஆவணங்களை கையாள்வதில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இது, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்குடன் தொடர்புடையது.

ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் மோதி, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை சந்தித்து பேசினார் என்று செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. அன்று மாலையே, இந்திய புலனாய்வு முகமையின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு துறைத் தலைவர் அனில் தஸ்மானாவையும் பிரதமர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
அஸ்தானா லஞ்ச வழக்கில் ராவின் சிறப்பு செயலாளர் சாமந்த் குமார் கோயாலுக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்படவில்லை.
விவகாரம்
ராகேஷ் அஸ்தானாவின் தலைமையில், சிறப்பு விசாரணை குழு (SIT) அமைக்கப்பட்டது, அந்தக் குழு மொயின் குரேஷி வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தது.
தேவேந்திர குமார் சிறப்புக் குழுவில் ஒரு புலனாய்வு அலுவலராக பணியாற்றினார். திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமையன்று, சிபிஐ பவனில் உள்ள தேவேந்திர குமாரின் அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
செவ்வாய்க்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் அஸ்தானா முதலிடத்திலும், தேவேந்திர குமார் இரண்டாம் இடத்திலும் இடம் பெற்றுள்ளார்கள். வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை தேவேந்திர குமார் மோசடி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார் என சிபிஐ ஆதாரங்களை மேற்கோள்காட்டி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனா சாதீஷ் பாபுவு தொடர்பான போலி அறிக்கையை வழங்கியதாக தேவேந்திர குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது, சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீதான ராகேஷ் ஆஸ்தானாவின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது.
சனா மொயின் குரேஷி வழக்கில் ஒரு சாட்சி என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்புக் குழுவின் விசாரணையில் இருந்து விடுவிக்க ஆஸ்தானா லஞ்சம் வாங்கியதாக, சானா கூறுகிறார்.

சி.ஆர்.பீ.சியின் 161வது பிரிவின்கீழ், சானாவின் கற்பனையான அறிக்கை தயாரிக்கப்பட்டது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தகவல்கள் கூறுகின்றன. செப்டம்பர் 26ஆம் தேதி டெல்லியில் இது பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கேள்வி
ஆனால், சிபிஐ விசாரணை அதிகாரிகளுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி, செப்டம்பர் 26ஆம் தேதியன்று சனா டெல்லியில் இல்லை, ஹைதராபாத்தில் இருந்தார். அவர் அக்டோபர் முதல் நாளில் இருந்துதான் இந்த விசாரணையில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சி.எம். ரமேஷை சனா சந்தித்துப் பேசினார். அதை அடுத்து, ரமேஷ், அலோக் வர்மாவை தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அதனை அடுத்து வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்றும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் சனா அளித்திருந்த வாக்குமூலம் கற்பனையானது என்றும் சிபிஐ கூறுகிறது.
சிபிஐ செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் தயால் கூறுகையில், 161 பிரிவின் கீழ் மொயின் குரேஷி வழக்கின் ஒரு சாட்சியான சதீஷ் சனா பாபுவின் வாக்குமூலம் பதியப்பட்டது. அந்த வாக்குமூலம் செப்டம்பர் 26ஆம் தேதி டெல்லியில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அன்று சதீஷ் சனா பாபு டெல்லியில் இல்லை, ஹைதராபாத்தில் இருந்தார் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. சானா அக்டோபர் முதல் தேதியில் இருந்துதான் விசாரணையில் இணைந்தார்.
இந்த 'கற்பனையான' அறிக்கையில் விசாரணை அதிகாரி தேவேந்திர குமாரின் கையொப்பம் இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் கேள்வி-பதில் வடிவத்தில் உள்ளது. சனா சதீஷ் பாபுவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில், "உங்களுக்கு எதிரான விசாரணை முடிந்துவிட்டாலும், மீண்டும் ஏன் சிபிஐ கேள்விகளை கேட்பதற்காக வரவழைத்தது?"
இந்த கேள்விக்கு பதிலளித்த சனா சதீஷ், "2018 ஜூன் மாதம், எங்கள் மாநிலத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், எனது நண்பருமான சி.எம் ரமேஷிடம் இதைப் பற்றி பேசினேன். அவர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இயக்குநரிடம் பேசுவதாக எனக்கு உறுதியளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக நான் ரமேஷை தொடர்ந்து சந்தித்து வந்தேன். வழக்கு தொடர்பாக சிபிஐ இயக்குநரை சந்தித்ததாக ரமேஷ் ஒருமுறை தெரிவித்தார். இனிமேல் விசாரணைக்காக சிபிஐ அழைக்காது என்றும் ரமேஷ் கூறினார். ஜூன் மாதத்திற்கு பிறகு சிபிஐ என்னை அழைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், எனக்கு எதிரான விசாரணை முடிந்துவிட்டது என்று நினைத்தேன்."

இது பற்றி, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் பேசிய ரமேஷ் இவ்வாறு கூறியிருக்கிறார்: "இதுவரை சிபிஐ அதிகாரிகள் யாரையுமே சந்தித்ததில்லை. எல்லாமே புனையப்பட்டவை. என்னுடைய பெயரை கெடுப்பதற்காக செய்யப்படும் சதி இது. எங்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமாக இல்லை என்ற நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். இப்போது, சனா சதீஷ் பாபுவின் அறிக்கையும் போலியானது என்று சி.பி.ஐயே கூறுகிறது."
அக்டோபர் 19ஆம் தேதியன்று, அஸ்தானா, சி.வி.சிக்கு எழுதிய கடிதத்தில், "எம்.பி ரமேஷுடனான சனாவின் உறவு சதாரணமானது, அதேபோல், ரமேஷும், அலோக் வர்மாவும் சந்தித்தது தனிப்பட்ட விதத்தில். தன்னை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று சனா கேட்டுக் கொண்டதற்கு, விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்படமாட்டார் என்று அவருக்கு சிபிஐ உறுதிகூறியது."
'லஞ்சம்'
துபாயில் உள்ள தொழிலதிபர் மனோஜ் பிரசாத்தின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றபோது அஸ்தானாவில் இந்த கடிதம் வந்தது. சனாவிடம் இருந்து அஸ்தானாவுக்காக லஞ்சம் வாங்கியதாக மனோஜ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமையன்று காலை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மனோஜ், அக்டோபர் 25ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அஸ்தானா மற்றும் குமாரைத் தவிர, சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை எண் 13 ஏ/2018இல், குற்றம் சாட்டவர்களின் பட்டியலில் மனோஜ் பிரசாத் மற்றும் சோமேஷ்வர் பிரசாத் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றன. 2017 டிசம்பர் முதல் 2018 அக்டோபருக்கு இடையில் லஞ்சம் கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சானாவின் வாக்குமூலத்தின்படி, ஐந்துக்கும் அதிகமான முறைகளில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 2017 டிசம்பர் பத்தாம் தேதியன்று துபாயில் ஒரு கோடி ரூபாய் (ஐக்கிய அரபு நாடுகளின் நாணயமான திர்ஹம் என்ற வடிவில்) லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மூன்று நாட்களுக்கு பிறகு, டெல்லியில் 1.95 கோடி ரூபாய் ரொக்கமாக லஞ்சம் வழங்கப்பட்டது. அக்டோபர் பத்தாம் தேதியன்று 25 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டது.
சிபிஐ விசாரணையின்படி, 2017ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் சானாவுக்கு நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டது. 5 கோடி ரூபாய் லஞ்சம் என பேரம் பேசப்பட்டதில், 2.95 கோடி கிடைத்த பிறகு, சானாவுக்கு எதிராக சம்மன் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டது.

பிப்ரவரியில் மனோஜ் பிரசாத்தை சந்திக்க சனா துபாய்க்கு சென்றபோது, சம்மன் அனுப்புவது மீண்டும் ஒருமுறை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சனாவுக்கு அனுப்பப்படுவதற்காக ஒரு நாள் முன்னரே சம்மன் தயார் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், சானாவுக்கு எதிரான லுக்அவுட் அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், வெளிநாட்டிற்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது.
சிபிஐக்குள் நடைபெறும் மோதலில் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகள் யார்?
சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐயின் அடுத்த உயரதிகாரி ராகேஷ் ஆஸ்தானாவும்தான் சிபிஐக்குள் எழுந்திருக்கும் இந்த மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கைத் தவிர இவர்கள் இருவருமே வேறு எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்கள். இவர்களில் வர்மா, 22 வயதிலேயே ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடன் பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் வர்மா தான் அனைவரைவிட வயது குறைந்தவர். சிபிஐ இயக்குநராக பதவி ஏற்பதற்கு முன்னர், டெல்லி காவல் ஆணையர், டெல்லி சிறைச்சாலைகள் டி.ஜி.பி., மிசோரம் மாநிலத்தின் டி.ஜி.பி., புதுச்சேரியின் டி.ஜி.பி., அந்தமான்-நிகோபாரின் ஐ.ஜி. என பல இடங்களில் அலோக் வர்மா பணியாற்றியிருக்கிறார். புலனாய்வு நிறுவனத்தில் எந்தவித அனுபவமும் இல்லாத ஒருவர் இதுவரை சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டது இல்லை என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.
1984ஆம் ஆண்டு குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, பல முக்கிய வழக்குகளை கையாண்டவர். பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட கால்நடைத் தீவன மோசடி வழக்கை விசாரித்த குழுவில் வர்மாவும் ஒருவர். குஜராத், கோத்ராவில் ரயில் தீ வைக்கப்பட்ட வழக்கை விசாரித்த குழுவில் இடம்பெற்றவர் ஆஸ்தானா என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அதாவது, பிரதமர் நரேந்திர மோதிக்கு அறிமுகமாகாத புதியவர் அல்ல அஸ்தானா. அதுமட்டுமல்ல, அவர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது அஸ்தானாவுக்கு பல பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்.
சனா சதீஷ் பாபு யார்?
ஆந்திரப் பிரதேச மாநிலம் காகிநாடாவை சேர்ந்தவர் சனா சதீஷ் பாபு. மாநில மின்சார வாரியத்தில் சில காலம் பணியாற்றிய அவர், வேலையை விட்டபிறகு, ஹைதராபாத் சென்றார். தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் மற்றும் வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சுமூகமான உறவை வைத்திருந்தார்.

2015ஆம் ஆண்டு அமலாக்க பிரிவு விசாரித்த வழக்கு ஒன்றில்தான் சனா சதீஷின் பெயர் முதல் முறையில் வெளியானது. இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியுடன் சனா சதீஷுக்கு தொடர்பு இருந்தது. 2017ஆம் ஆண்டில், இந்த விவகாரத்தில் மொயின் குரேஷியின் சார்பில் செயல்பட்ட சனா சதீஷ் அவரை வழக்கிலிருந்து வெளிகொண்டுவரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
அந்த காலகட்டத்தில் வழக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ இடம் வந்துவிட்டது. ரஸ்மா எஸ்டேட் எல்.எல்.பி., கோல்ட் கோஸ்ட் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட், மேட்ரிக்ஸ் இயற்கை வளங்கள் தனியார் லிமிடெட், கிழக்கு கோதாவரி ப்ரூவரிஸ் பிரைவேட் லிமிடெட் போன்ற பல நிறுவனங்களின் இயக்குநர்.
யார் இந்த மொயின் குரேஷி?

சிபிஐயின் மூத்த இரு உயர்திகாரிகள் இடையிலான மோதலின் மையப்புள்ளியாக மாறினார் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி. மொயின் அக்தர் குரேஷி என்பதுதான் அவரது முழுப் பெயர். டேராடூனின் பிரபல டூன் ஸ்கூல் மற்றும் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் கல்வி பயின்றவர் மொயின் குரேஷி.
1993இல் தனது தொழிலைத் தொடங்கிய குரேஷி, உத்தரப் பிரதேச மாநிலம் ராம்புரில் சிறிய அளவிலான இறைச்சி வெட்டும் கூடத்தை தொடங்கி தொழிலில் ஈடுபட்டார்.
சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் மிகப்பெரிய இறைச்சி வியாபாரி ஆனார் குரேஷி. தொடர்ந்து தனது வியாபாரத்தை விரிவுபடுத்திய அவர், கட்டுமான நிறுவனம் மற்றும் பேஷன் நிறுவனம் உட்பட 25 வெவ்வேறு நிறுவனங்களைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொழில் செய்து வந்தார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டநரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பதால், குரேஷிக்கு எதிரான வருமான வரி வழக்கு விசாரணை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
சிபிஐ முன்னாள் இயக்குனர் ஏ.பி. சிங் மற்றும் ரஞ்சித் சின்ஹா ஆகியோருடன் நெருக்கமாக இருப்பதாகவும் குரேஷி குற்றம் சாட்டப்பட்டிருந்தார். வருமான வரி செலுத்துவதில்லை என்று குரேஷி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் 200 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருக்கும் குற்றசாட்டில் அமலாக்கப் பிரிவும் குரேஷி மீதான விசாரணையை மேற்கொண்டுள்ளது.