ஷ்யாம் நீயூஸ்
04.01.2023
திருச்செந்தூர் பள்ளி மாணவன் மர்ம மரணம் தலைமை ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்செந்தூர் அருகே தோப்பூரில் பள்ளி வளாகத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து அவனது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரில் உள்ள ஆதிதிராவிட நலப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர் அஜய்குமார் (10) . அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த அஜய்குமார் உள்ளிட்ட ஐந்து மாணவர்களை தலைமை ஆசிரியர் கனகவள்ளி நேற்று முன்தினம் பள்ளிக்கு வரவழைத்து அங்கே புல் அகற்றும் வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர். அப்போது, அஜய்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறுவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவனது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடத்தில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் இதில்
தோப்பூர் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகவள்ளி மீது துறைரீதியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தலைமையாசிரியை மீது காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறந்த மாணவரின் குடும்பத்திற்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும். இறந்த மாணவரின் மரணம் குறித்து சட்டரீதியாக காவல்துறை மூலம் புலன் விசாரணை மேற்கொண்டு மரணத்தின் உண்மை தன்மை கண்டறியப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவனின் உடலை வாங்க கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் திருமதி.கனகவள்ளியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பரிமளா உத்தரவு பிறப்பித்துள்ளார்
(தலைமை ஆசிரியர் கனகவள்ளி நான்கு மாதத்தில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)