திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கனிமொழி எம்.பி. தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
ஷ்யாம் நீயூஸ்
08.03.2022
தூத்துக்குடி : திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கனிமொழி எம்.பி. தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
அதன் முன்னோட்டமாக திமுக மகளிரணிக்கு என தனி இணையதளம் ஒன்றையும் உருவாக்கி அதனை ஸ்டாலினை அழைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார்.
திமுகவில் உள்ள சார்பு அணிகளில் இளைஞரணியும், மகளிரணியும் மட்டுமே பிரதான இடத்தில் இருந்து வருகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நேற்று தொடங்கியதல்ல, ஆரம்பகாலம் தொட்டே திமுகவில் இவ்விரு அணிகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இளம்பெண்களை புதிய உறுப்பினர்களாக இணைக்கும் வகையில் திமுக மகளிரணிக்கு புதிதாக தனி இணையதளம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
இந்த இணையதளம் மூலம் திமுக மகளிரணியில் இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேரமுடியும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் எல்லோரும் நம்முடன் என்ற முழக்கத்துடன் திமுகவில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் உறுப்பினர் சேர்ப்பை போல் இப்போது கனிமொழி இளம்பெண்களை கட்சியில் இணைக்க புதிய வழிமுறையை கையிலெடுத்துள்ளார். உலக மகளிர் தினமான இன்று முதல்வர் ஸ்டாலினை அழைத்து விழா நடத்தி இந்த இணையதளத்தை கனிமொழி தொடங்கி வைக்கிறார்.
இதனிடையே இனி வரும் நாட்களில் தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்து திமுக மகளிரணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை துரிதப்படுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் முழு அனுமதியோடு தான் இந்த நடவடிக்கைகளில் கனிமொழி தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பதாகவும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மகளிரணியை வலிமை வாய்ந்த கட்டமைப்பாக உருவாக்கிவிடுவார் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
திமுக இளைஞரணியில் இளம்பெண்களை புதிதாக உறுப்பினர்களாக சேர்க்கும் நிகழ்வு அண்மையில் கோவையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போதே மகளிரணியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தொடங்கிய கனிமொழி, இடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிஸியாக இருந்தார். இப்போது முழுக்க முழுக்க மகளிரணி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.