தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி வந்து செல்வதற்கான வழித்தடங்களை மேயர் ஜெகன்பெரியசாமி ஏற்பாடு செய்து கொடுத்தார்.
ஷ்யாம் நியூஸ்
23.03.2022
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி வந்து செல்வதற்கான வழித்தடங்களை மேயர் ஜெகன்பெரியசாமி ஏற்பாடு செய்து கொடுத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி தான் பொறுப்பேற்ற நாள்முதல் தினம்தோறும் மாநகர பகுதிகளையும், மாநகரில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை, சாலை அமைத்தல், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை துரிதமாக செய்து கொடுத்தும் வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயிலில் இருந்து மருத்துவமனைக்கு உள்ளே ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதில் தொடர்ந்து பெரும் இடையூறுகள் நிலவி வந்தது.
இதுகுறித்தும், மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் இருச்சக்கர வாகனங்களால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது குறித்தும், இதில் உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் மாநகராட்சி மேயருக்கு புகார் வந்தது.
இதுதொடர்பான புகாரினைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குழுவினருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மேயர் ஜெகன்பெரியசாமி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டவர்களுடன் வழித்தட பகுதிகளை ஆய்வுசெய்து மருத்துவமனை உள்ளே ஆம்புலன்ஸ்கள் தடையின்றி வந்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், உள்ளே செல்லும் வழித்தடப்பகுதிகளிலும் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், தூத்துக்குடி பாளை ரோடு விவிடி சிக்னல் சந்திப்பில் இருந்து மருத்துவமனை பிரதான நுழைவு வாயில் வழியாகவும் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்று வருவதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு புழக்கத்தில் இல்லாமல் இருந்த வழித்தடம் ஆகியவையும் புதுபிக்கப்பட்டு இந்த இரண்டு வழித்தடங்கள் வழியாகவும் ஆம்புலன்ஸ்கள் எந்தநேரமும் தடையின்றி வந்து செல்ல துரிதமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர கால ஆம்புலன்ஸ்கள் தடையின்றி வந்து செல்வதற்கு துரித நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமிக்கு நோயாளிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவமனை பணியாளர்கள், திமுக பிரமுகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.