SHYAM NEWS
20.11.2025
ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது-உச்ச நீதிமன்றம்
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்றும், அப்படி செய்தால் கட்டுப்படுத்தப்பட்ட/ குறுகிய (limited) நீதிமன்ற மறு ஆய்வு செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், மசோதாக்கள் சட்டமாகிவிடும் என்று ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட காலக்கெடு விதிப்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று (நவ. 20) உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்த தகவல்களை barandbench வெளியிட்டுள்ளது. அதன் படி, "ஆளுநருக்கு மசோதாக்களை (முடிவெடுக்காமல்) வைத்திருக்க முழுமையான அதிகாரம் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் .. எனவே, அவ்வாறு வழங்கப்பட்ட விருப்புரிமை அவரை நிரந்தரமாக மசோதாக்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. அவரிடம் உள்ள மூன்று தெளிவான தெரிவுகள் -ஒன்று ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது மற்றும் கருத்து தெரிவிக்க சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்புவது அல்லது குடியரசு தலைவருக்கு பரிந்துரைப்பது. இந்த மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அமைச்சரவைதான் ஓட்டுநர் இருக்கையில் (இயக்குபவராக) இருக்க வேண்டும், மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது என்று நாங்கள் கருதுகிறோம்." என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் குடியரசு தலைவரின் பங்கு ஒன்றியத்திற்கு பிணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ஒரு ஒருங்கிணைந்த அலகு முக்கியமானது. ஆளுநர் தனது ஒப்புதலுக்காக மசோதாவை வழங்காவிட்டால் குடியரசு தலைவர் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த முடியாது. மசோதாவை திருப்பித் தருமாறு அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புமாறு அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது சாத்தியமில்லை. பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு விருப்புரிமை இல்லை என்று கருதுவது புரிந்துகொள்ள முடியாதது.
எனவே, இந்த நீதிமன்றத்தின் முந்தைய முன்னுதாரணங்களிலிருந்து விலகிச் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கருதுகிறோம். மசோதாக்கள் சட்டமாகிவிட்டால் மட்டுமே நீதித்துறை மறுஆய்வு மற்றும் ஆய்வு செய்ய முடியும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks bbc tamil
