ஷ்யாம் நீயூஸ்
19.11.2025
தூத்துக்குடி 3 டாக்டர்கள் விபத்தில் பலி மேலும் 2 டாக்டர்கள் படுகாயம் .
கோயம்புத்தூர், PN புதூர் சாஸ்திரி 1வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் சாரூபன் (23), புதுக்கோட்டை பரிசுத்தம்மன் மகன் ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூர் மந்தவெளி குறும்பேறியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முகிலன் (23), தூத்துக்குடி தெர்மல் நகர் ரவிக்குமார் மகன் கிறிஸ்டிகுமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய 5பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் 5 பயிற்சி டாக்டர்களும் காரில் புதிய துறைமுகம் கடற்கரைக்கு சென்றனர். காரை சாருபன் ஒட்டி சென்றுள்ளார். கார் பீச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த மழை பெய்ததால் ரோடு சரியாக தெரியாததால் கார் நிலை தடுமாறி அருகிலுள்ள வேப்ப மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. 5பேரும் காருக்குள் சிக்கி கொண்டனர்
இது குறித்து அந்தப் பகுதியில் சென்ற மீனவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று காருக்கு சிக்கிய 5பேரையும் மீட்டனர். இதில் சாரூபன், ராகுல் ஜெபஸ்தியான், முகிலன் ஆகிய 3பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த கிறிஸ்டி குமார், சரண் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் டவுன் ஏஎஸ்பி மதன், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனையில் ஏராளமான பயிற்சி டாக்டர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் குவிந்துள்ளனர்.தூத்துக்குடியில் கார் விபத்தில் 3 டாக்டர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
