SHYAM NEWS
நடிகை வழக்கில் சீமான் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது பிரபல நடிகை ஒருவர் 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தாா். வளசரவாக்கம் போலீஸாா் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2011-இல் அளித்த புகாரை, 2012- ஆம் ஆண்டிலேயே அந்த நடிகை திரும்பப் பெற்றுக் கொண்டாா் என்று குறிப்பிட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மான் அளித்த மனு மீதான வழக்கு கடந்த திங்கள்கிழமை நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், நடிகை தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில் அவா், 'பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சா்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது' என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தற்போது வழக்கின் தீா்ப்பு முழுமையாக வெளியாகியுள்ளது. அதில், மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. பாதிக்கப்பட்ட நடிகை கொடுத்த வாக்குமூலம் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்த பொழுது அந்த நடிகைக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை.
திரைத்துறை தொடா்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளாா். தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் அந்த நடிகை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா். எனவே இந்த வழக்கைப் பொருத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது. எனவே இந்த வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது" என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.