SHYAM MEWS
21.03.2025
தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மீனுக்கு 'தமிழிகம்' என பெயர்?
மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை.
அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன் பெயர். அதற்கு அரியோசோமா தமிழிகம் (Ariosoma tamilicum) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை அடையாளப்படுத்தும் விதமாக விலாங்கு மீனுக்கு பெயர் சூட்டியது ஏன்? சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இந்தப் புதிய வகை விலாங்கு மீன் குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) கீழ் செயல்படும் தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் (NBFGR) ஆய்வாளர்கள், இதுவரை அறியப்படாத காங்கிரிடே (Congridae)) என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை விலாங்கு மீனை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தப் புதிய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டுமின்றி, அதற்கு தமிழ் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் பெயர் சூட்டியிருப்பதால் பொது மக்கள் மத்தியில் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது.
அரியோசோமா தமிழிகம் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த விலாங்கு மீன், உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் மற்றும் அதன் தொன்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாகச் சூட்டப்பட்டுள்ளது என்று தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் செயல் இயக்குநர் முனைவர் டி.டி.அஜித் குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்..
தமிழிகம் விலாங்கு மீனை முதலில் கண்டுபிடித்த மீனவர்கள்
இந்தப் புதிய கடல்வாழ் உயிரினத்தைக் கண்டுபிடிப்பதில் ஆய்வாளர்களைப் போலவே, தூத்துக்குடி மீனவர்களுக்கும் முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்தார் தமிழிகம் விலாங்கு மீன் குறித்த ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரான முனைவர். கோடீஸ்வரன்.
"தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால் மீனவர்களுடன் தொடர்பிலேயே இருப்போம். அவர்களும் புதிதாக, தாங்கள் இதுவரை கண்டிராத தோற்றங்களைக் கொண்ட கடல் உயிரினங்களைக் கண்டால் உடனே எங்களுக்குப் புகைப்படம் எடுத்து அனுப்புவார்கள்.
அதே போலத்தான் தமிழிகம் விலாங்கு மீனும் எங்கள் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த விலாங்கு மீனின் தோற்றம் இதுவரை காணாத வகையில் வித்தியாசமாக இருந்ததால், மீனவர்கள் அதை எங்களிடம் பகிர்ந்தனர்," என்று விவரித்தார் கோடீஸ்வரன்.
"தமிழிகம் விலாங்கு மீன் இனத்தைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு உதவிய மீனவர்கள் அதற்குத் தமிழ்நாட்டின் பெயரை வைக்குமாறு கோரினர். பின்னர் உலகின் பழமையான மொழியான தமிழின் பெயரை அதற்கு வைக்குமாறும் சில மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பின்னர் இது சர்வதேச ஆய்வறிக்கை விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது," என்று முனைவர் அஜித் குமார் கூறினார்.
தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, லட்சத்தீவு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் புதிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டுபிடிக்கும் நோக்குடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்போது அரியோசோமா இனத்தைச் சேர்ந்த காங்கிரிடே விலாங்கு மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
"இந்த விலாங்கு மீனின் தோற்றத்தில் இருந்த தனித்தன்மையைப் வெறும் கண்களால் பார்க்கும்போதே கண்டறிய முடிந்தது. அதை மேலும் ஆய்வு செய்ததில், அதுவொரு புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டது," என்று இந்த ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளரான முனைவர். கோடீஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதேபோல், முன்னமே தூத்துக்குடியில் இருந்து, இதே காங்கிரிடே அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு விலாங்கு மீன் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. "அதற்கு தங்கள் ஊரின் பெயரை வைக்குமாறு மீனவர்கள் கேட்டனர். ஆகையால் அந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் (Ariosoma Thoothukudiense) எனப் பெயர் வைக்கப்பட்டது" என்று கூறினார் கோடீஸ்வரன்.