SHYAM NEWS
01.03.2025
ஏப்.,1 முதல் பெட்ரோல் கிடையாது! டெல்லியில் இருந்து வெளியான அறிவிப்பு!
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 ஆண்டு பழைமையான வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று டெல்லி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டு வரும் சூழலில் அதனை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு என்பது நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது
தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் டெல்லியில் மக்கள் வசிக்க முடியாத நிலை என்பது ஏற்படும்.
தற்போது டெல்லியில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியை பாஜக வீழ்த்தி அரியணை ஏறியது. தற்போது டெல்லியில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா செயல்பட்டு வருகிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மன்ஜிந்தர் சிங் சிர்சா இருக்கிறார். இந்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதை குறைப்பது தொடர்பாக இன்று அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது காற்று மாசுவை குறைக்க வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பிறகு டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் காற்று மாசுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. இதனால் 15 ஆண்டு பழைமையான வாகனங்களை சாலையில் இருந்து ஓரம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் டெல்லியில் 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் என்பது வழங்கப்படாது. இந்த வாகனங்களின் வயதை கணக்கிடுவதற்கு பிரத்யேகமான கருவிகள் டெல்லி பெட்ரோல் நிலையங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த முடிவு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல் டெல்லிக்குள் நுழையும் கனரக வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தரநிலையை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகளைத் தவிர, டெல்லியில் உள்ள அனைத்து உயரமான கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த புகை எதிர்ப்பு துப்பாக்கிகளை நிறுவுவது கட்டாயமாக்கப்படும்'' என்றார். டெல்லியை பொறுத்தவரை ஏற்கனவே இந்த கொள்கை என்பது இதற்கு முன்பே 2021ல் வகுக்கப்பட்டு விட்டது. அதன்படி 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும் சாலைகளில் இயக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2022 ஜனவரி 1ம் தேதி முதல் விதியை மீறுவோர் கண்டறியப்பட்டால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பழைய இரும்பு கடைக்கு அனுப்பபப்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் முறையாக அது பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் தான் புதிதாக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் என்பது ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கக்கூடாது என்ற நடைமுறையை உறுதியாக கொண்டு வர உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.