முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு.நாடார் சங்கம் மேல் முறையிடு செய்ய ஆலோசனை !

 

SHYAM NEWS

17.04.2025

தமிழ்நாடு பள்ளி, கல்லூரிகளில் சாதி பெயர்களை நீக்க வேண்டும்  உயர்நீதிமன்றம் உத்தரவு.நாடார் சங்கம்  மேல் முறையிடு செய்ய ஆலோசனை !

தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்தச் சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளை ரத்து செய்து, சங்கத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளிக்க அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது.
அதேபோல, திருச்செங்கோடு வட்டக்கொங்கு வேளாளர் சங்கம், தி புவர் எஜுகேஷனல் ஃபண்ட் ஆகியவற்றின் சார்பில் வெவ்வேறு கோரிக்கைகளோடு வேறு சில வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழங்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஏப்ரல் 16ஆம் தேதி இந்த வழக்குகளில் மொத்தமாகத் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

சுமார் 40 பக்கங்களுக்கு நீளும் இந்தத் தீர்ப்பில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

  • சாதி சங்கங்கள் பலவும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களை சாதி பெயர்களிலேயே நடத்துகின்றன. அந்த சாதி பெயர்களை அப்படியே தொடர அனுமதிக்க முடியுமா? இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமெனக் கூறியபோது அரசுத் தரப்பு வழக்கறிஞர் அதற்கு கால அவகாசம் கோரினார். பிறகு, அரசு தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி, தற்போதைய வழக்கோடு இது தொடர்பில்லாதது; அதற்குள் செல்ல வேண்டாம் எனப் பதிலளித்தது.
  • மேலும், நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்குகளை தேவையில்லாமல் போகச் செய்யும் வகையில், மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, ஆணைகளை வெளியிட்டது.
  • அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளான நிலையில், சாதிப் பாகுபாடுகள் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. இன்னொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்தார் என்பதற்காகவே பெற்றோர், தங்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர். குழந்தைகள் தூய்மையான மனதைக் கொண்டவர்கள் என்பதை அறிவோம். ஆனால், அது மாறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சாதிகளை குறிப்பிடும் வகையில் கயிறுகளை அணிகிறார்கள். பையில் ஆயுதங்களைக் கொண்டுவந்து சக மாணவர்களைத் தாக்குகின்றனர்.
  • தற்போது மனுத்தாக்கல் செய்திருக்கும் மனுதாரர்கள், சாதியை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்களது சங்கப் பெயரிலேயே சாதி இருக்கிறது. அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த சங்கங்களில் சேர முடியும். அடுத்ததாக, ஒரே சமூகத்தைத் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, சமூகத்துக்குப் பயனுள்ள சில விஷயங்களைச் செய்வதில் என்ன தவறு என்கிறார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட சாதிக்காக மட்டும் ஒரு சங்கத்தை உருவாக்கி, பெயரிலேயே சாதியை வைத்திருந்தால் அது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகிறது.
    • இந்த சாதி சங்கங்களுக்கு உள்ளே உள்ள மோதல்கள், அது தொடர்பான வழக்குகள் என்பவை அரசியலமைப்புச் சட்ட இலக்குகளுக்கு முரணானவை. ஆகவே, இது போன்ற வழக்குகளை விசாரிக்க முடியாது. சங்கங்களின் பதிவாளர், எல்லா சங்கங்களின் பட்டியலையும் எடுத்து, அவற்றின் பெயர், நோக்கம் ஆகியவை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அவை தங்களது பெயரையும் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ள கால அவகாசம் தர வேண்டும். அம்மாதிரி, பெயரையும் விதிமுறைகளையும் பதிவாளரிடம் சென்று மாற்றிக்கொண்டவர்கள் மட்டுமே இது போன்ற பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தை அணுகலாம்.
    • சங்கங்களில் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்கி, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தங்கள் சங்கத்தில் இணைய முடியும் என்ற விதிகளை மாற்ற வேண்டும். அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவித்து, அவற்றின் பதிவை பதிவுத்துறை ஐ.ஜி. ரத்து செய்ய வேண்டும். இந்தப் பணியை மூன்று மாதங்களுக்குள் துவங்கி, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
    • இந்த சங்கங்களாலோ, அறக்கட்டளைகளாலோ நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதிப் பெயர்களைக் கொண்டிருக்கக் கூடாது. சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளில் சாதிப் பெயர்கள் இனி இடம்பெறக்கூடாது. கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும்.
    • அவ்வாறு நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அந்தக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை அங்கீகாரம் பெற்ற வேறு கல்வி நிறுவனங்களுக்கு அரசு மாற்ற வேண்டும். அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற சாதிப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். பொதுவான பெயரான அரசுப் பள்ளி என்ற பெயரே இடம்பெற வேண்டும். பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.

    என இந்த தீர்ப்பு கூறுகிறது.

    சாதி சங்கங்கள் என்ன சொல்கின்றன?

    தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சாதிச் சங்கங்கள் இருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    "தமிழ்நாட்டில் முதன்முதலில் துவங்கப்பட்ட வெகு சில சாதி சங்கங்களில், எங்களுடையதும் ஒன்று. 1927ல் இதனைத் துவங்கினோம். இது எங்களுடைய கலாசார அடையாளம். பெயரை எப்படி மாற்ற முடியும்? தமிழ்நாடு அரசு இந்தத் தீர்ப்பை எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவரான கே.பி.கே. செல்வராஜ்.

    தாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை வேறு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வேறு எனக்கூறிய அவர், சம்பந்தமே இல்லாத தீர்ப்பாக இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது என்றார்.

    வேறு பல சாதி சங்கங்களும் அதிர்ந்து போயிருக்கின்றன. நாடார் சங்கங்களைப் பொறுத்தவரை ஞாயிற்றுக் கிழமையன்று சென்னையில்கூடி இந்த விவாகரம் குறித்து விவாதிக்கப் போவதாகச் சொல்கிறார் நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. கரிக்கோல்ராஜ்.

    "தீர்ப்பைப் பற்றி எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எங்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 120 வருடங்கள் ஆகின்றன. அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவ அமைப்புகளும் சாதி அமைப்புகளும்தான் ஆங்காங்கே பள்ளிக்கூடங்களைத் துவங்கி கல்வி அளித்தன. அந்தப் பள்ளிக்கூடங்களில் சம்பந்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தான் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது" என்கிறார் அவர்.

    இப்போது திடீரென இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் என்ன சொல்வதெனத் தெரியவில்லை எனக்கூறும் அவர், இந்தியாவில் எங்கேயுமே ஜாதி பாகுபாடே இருக்காது என அரசு உத்தரவிட்டுவிட்டால், சங்கங்களைக் கலைத்துவிடுவதாக கூறினார்.

    வரும் ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்ப்பை மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பதை முடிவு செய்வோம் என்கிறார் கரிக்கோல் ராஜ்.

    'நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பு'

    ஆனால், இந்தத் தீர்ப்பு கட்டாயம் செயல்படுத்த வேண்டிய ஒரு உத்தரவு என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

    கல்வி நிறுவனங்களில் சாதி பெயர் இருக்கவே கூடாது என்பதை நான்காண்டுகளுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திவருவதாக அவர் குறிப்பிடுகிறார். நீதிபதி சந்துரு கமிட்டியும் அதை பரிந்துரைத்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

    "சுதந்திரத்துக்கு முன்பாக சாதியாகத் திரண்டுதான் கோரிக்கைகளை முன்னெடுத்தார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்த பிறகு, எல்லோரும் சமம் எனச் சொன்ன பிறகு இதுபோல சாதிச் சங்கங்களுக்கும் அவற்றின் செயல்பாடுகளுக்கும் என்ன இடம் இருக்கிறது?" என கேட்கிறார் அவர்.

    சாதிய வேற்றுமையை களைவதை நோக்கி அரசு செயல்பட வேண்டும். அதைத்தான் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது என்கிறார் ரவிக்குமார்.

    ''அதுதான் சமூக நீதியை நோக்கிய பயணமாக இருக்க முடியும்."

    இந்த உத்தரவு, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட உத்தரவாக கருதும் ரவிக்குமார், இதை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறது என்றும் முதலில் அரசின் கல்வி நிறுவனங்களில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

    ஆனால், நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளே செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், இந்த உத்தரவை செயல்படுத்துவதிலும் சுணக்கம் காட்டக் கூடாது என்கிறார் அவர்.

    "நீதிபதி சந்துருவின் பரிந்துரைகள் மிக முக்கியமானவை. அவை ஏன் இன்னும் கிடப்பில் கிடக்கின்றன என்பது புரியவில்லை. முதலில் எல்லாத் தரப்பினருக்கும் கருத்தொற்றுமை இருக்கக்கூடிய விஷயங்களையாவது செயல்படுத்த வேண்டும். வேறு பல விஷயங்களில் தீவிரமாகச் செயல்படும் தமிழக அரசு சாதி தொடர்பான விஷயங்களில் தயங்குகிறது. அதனால்தான் அது தொடர்பான வன்முறைகள் அதிகரிக்கின்றன" என்கிறார் ரவிக்குமார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...