SHYAM NEWS
16.10.2019
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினியிடம் விசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தூத்துக்குடியில் உள்ள இந்த விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக சீமான் இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பந்தமாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி எனது கருத்துகளை கூற வந்துள்ளேன்.
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மக்கள் தான் போராடினார்கள். ஆனால் போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார். அவருக்கு எப்படி சமூகவிரோதிகள் புகுந்தது தெரியும். எனவே ரஜினியையும் விசாரணை கமிஷன் முன்பு ஆஜர்படுத்த வேண்டுமென நீதிபதியிடம் வலியுறுத்துவேன். எனக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக கூறுவது முற்றிலும் பொய். எனக்கு பணம் வருகிறது என்றால் வருமான வரித்துறை என்ன செய்கிறது ?
என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தட்டும். ஈழத்தமிழர்கள் எனக்கு பணம் கொடுத்தாலும் என் மீதான அன்பால், பாசத்தால் தான் கொடுக்கிறார்கள். அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. அலிபாபாவும் 40 திருடர்களும் போல் அம்மாவும் 40 திருடர்களும் என கூறலாம். அம்மா தற்போது இல்லை 40 திருடர்கள் உள்ளனர். ரவுடிகள் எல்லாம் அமைச்சரானால் பொதுமக்களும் ரவுடியாக தான் தெரிவார்கள். மக்கள் போராடுவது தவறு என்றால் மக்களை போராட்டத்திற்கு தூண்டிய அரசுகள் மீதும் தவறு உள்ளது. அரசின் கொள்கை முடிவுக்கு ஆதரவாக போராடிய மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்துவது எவ்வகையில் நியாயம்?பொதுமக்கள் அமைதியாக தான் நடந்து வந்தனர். கலவரம் வரும் என போலீசாருக்கு முன்னரே எவ்வாறு தெரியும்? இவ்வாறு அவர் கூறினார்.