ஷ்யாம் நியூஸ்
12.08.2019
தூத்துக்குடி பேருந்து நிலையம் பணிகளை கனிமொழி எம்பி - கீதாஜீவன் எம்எல்ஏ ஆய்வு
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகளை கனிமொழி எம்பி - கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் பழைய பேருந்து நிலையப் பணிகளை கனிமொழி எம்பி, கீதாஜீவன் எம்எல்ஏ ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவமனையில் அவசர கால சிகிச்சை பிரிவில் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், நோயாளிகளின் தேவைகள், குறைகளை கேட்டறிந்தனர். முன்னதாக அரசு மருத்துவமனைக்கு வந்த கனிமொழி எம்பியை மருத்துவ கல்லூரி முதல்வர் ராமசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர் இன்சுவை, டாக்டர் பாலவன் மற்றும் மருத்துவர்கள் வரவேற்றனர்
தொடர்ந்து அவர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெறும் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு செய்து தரப்பட உள்ள வசதிகள் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பயணிகளிடம் குறைகள் கேட்டறிந்தனர். பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை.
மழைக்காலம் நெருங்கி வருவதால் மழை பெய்தால் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடமில்லை. மேலும் கழிப்பிடங்கள், குடிநீர் வசதி ஆகியவையும் போதுமான அளவில் இல்லை. ஆகவே இவற்றையெல்லாம் பயணிகளுக்கு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளுக்கு செய்து தரப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் எல்லாம் தற்காலிகமானதாக இருந்தாலும் அவற்றை சரியாக செய்து கொடுக்க வேண்டும். மருத்துவர் வரைவு மசோதாவை பாராளுமன்றத்தில் திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இங்குள்ள நிலைமைகளை புரிந்து கொண்டு அதில் மாற்றம் கொண்டு வரும் என்றார். ஆய்வின் போது திமுகவினர் உடன் சென்றனர்.