ஷ்யாம் நீயூஸ்
22.01.2021
திருமண ஆசை காட்டி தமிழக இளைஞர்களை ஏ மாற்றும் கேரள புரோக்கர்கள்!
இன்னைக்கு 30 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டால் அதுவே பெரிய சாதனை. அன்னைக்கெல்லாம் சம்பளம் முக்கியம் இல்ல, சொந்த வீடு கூட முக்கியம் இல்ல, பையன் நல்லா இருந்தா போதும், கண்ணை மூடிக்கொண்டு பெண்ணை கையில் ஒப்படைத்து விடுவார்கள். இன்னைக்கு சொத்து வேண்டுமாம், வருடத்திற்கு 5 இலட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்க வேண்டுமாம். எல்லாம் சரியாக இருந்தால், ஜாதகம் அக்யூரெட்டா பொருந்தி வரணுமாம். கட்டம் 7,8ல் எதிர்பார்த்த கிரக அமைப்பு இல்லை என்று சொல்லியே என் தோழியின் குடும்பம் நல்ல நல்ல வரன்களை எல்லாம் நிராகரித்துவிட்டனர்.
இப்படியே போனால், 35 வயதுக்குள்ளாவது கல்யாணமாகி விடுமா? என்ற ஏக்கத்தில், நம்ம பசங்க ஏங்கித்தவிக்கிறாங்க. கரெக்டா சூழ்நிலையை புரிந்து கொண்ட, மேட்ரிமோனி சைட்டுகள், கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டன. பல ஆயிரம் கோடி புழங்கும் தொழிலாக மேட்ரிமோனி பிசினஸ் மாறியிருக்கிறது. தெருவுக்கு தெரு தடுக்கி விழுந்தால், ஒரு திருமண புரோக்கர் ஆபீஸ் முன்பு எந்திரிக்கலாம். அந்த அளவுக்கு திருமண புரோக்கர் பிசினஸ் பெருகிவிட்டது.
இதிலும் மோசடி செய்யப்பார்க்கும் கும்பல், நம்ம ஊரில் பெண்கள் கிடைக்காவிட்டால் என்ன, உங்களுக்கு கேரளத்து பெண் குட்டியை லட்டு மாதிரி பார்த்து கட்டி வைக்கிறோம் என்று சொல்லி, லம்பா ஒரு தொகையை வாங்கிவிட்டு எஸ்கேப்பாகி விடுகின்றனர். எப்படியாவது மகனுக்கு திருமணமானால் போதுமென ஆசை ஆசையாக நம்பிச்செல்லும் மணமகனின் குடும்பத்துக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கேரளாவை சேர்ந்த இந்த புரோக்கர்கள், தங்களிடம் திருமண வயதில் பெண்கள் இருப்பதாக கூறி, இளைஞர்களை தங்கள் வசம் திருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணத்திற்கு புரோக்கர் கமிஷன் ஆக இரண்டு முதல் மூன்று லட்சங்கள் ஆகும் என கூறி சில இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டுகின்றனர். பிறகு அந்த பெண்களை நேரில் சென்று பார்க்க சில ஆயிரங்கள் வாங்கி கொண்டு கேரளா கூட்டி சென்று, முன்னதாக செட் அப் செய்து வைத்த குடும்பத்தையும் பெண்ணையும் காட்டுகின்றனர். அதன் பின்பு நிச்சயதார்த்தம் செய்வதாக கூறி கமிசனாக ஒரு லட்சம் வரை பணம் பறித்துக் கொண்டு தலைமறைவாக செல்கின்றனர். இதற்கு சில உள்ளூர் திருமண புரோகர்களும் உடந்தையாக இருக்கின்றனர். ஒரு காலத்தில் ஈமு கோழி மோசடியில் பெயர் பெற்ற ஈரோடு, இன்னைக்கு இப்படிப்பட்ட மோ சடியில் சிக்கித்தவிக்கிறது. இங்கிருந்தே மற்ற மாவட்டங்களுக்கு கும்பல் பரவ முயற்சிக்கும் என்பதால், யாராக இருந்தாலும் உஷாரா இருங்க. பணத்தை கையில் ஒப்படைப்பதற்கு முன்பு, தீவிரமாக விசாரணை செய்துகொள்ளவும்.