ஷ்யாம் நீயூஸ்
14.10.2024
20 சதவீதம் போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
மிகை ஊதியம், கருணைத் தொகையை கூடுதலாக வழங்க கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.52 ஆயிரம் கோடி வரி வருவாயாக ஈட்டி தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.16,800 மட்டுமே மிகை ஊதியம் கிடைக்கும் என்பதை கருத்தில்கொண்டு, மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கூடுதல் மிகை ஊதியம் வழங்கவேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ம் ஆண்டின்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21 ஆயிரம் என்பதனை தளர்த்தி அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகைய வழங்கப்படும்.
அதன்படி லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை வழங்கப்படும்.
ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத குறைந்த பட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீத வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும்.
முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றி கூறி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநில தலைவர் நா.பெரியசாமி, பொதுச்செயலாளர் த.தனசேகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- "தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்களுக்கு இந்த ஆண்டு போனசாக 8.33 சதவீதமும், 11.67 சதவீதம் கருணை தொகையும் சேர்த்து 20 சதவீதம் போனஸ் வழங்க அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிர்வாகத்துக்கு நன்றி.அதேசமயம் அண்டை மாநிலமான கேரளாவில் மதுபான கடை பணியாளர்களுக்கு திருவோணம் மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை ரூ.95 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும், இது கடந்த ஆண்டை விட 29.5 சதவீதம் கூடுதல் என்று கணக்கிட்டு சுமார் ரூ.95 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு மதுபான வியாபாரத்தில் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கும் குறைவான வருமானம் பெறும் அரசு பணியாளர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் வகையில் போனஸ் வழங்கியுள்ளது என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.52 ஆயிரம் கோடி வரி வருவாயாக ஈட்டி தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.16,800 மட்டுமே மிகை ஊதியம் கிடைக்கும் என்பதை கருத்தில்கொண்டு, மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கூடுதல் மிகை ஊதியம் வழங்கவேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.