ஷ்யாம் நீயூஸ்
23.11.2023
அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு -அமைச்சர் கீதா ஜீவன்.
தமிழகம் முழுவதும் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக இரவு-பகல் என்று மழை பெய்து வருகிறது. இது ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை சீர்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பொதுமக்களின் பாதிப்புகளை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் உடனடியாக களமிறங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரிடர் மேலாண்மை மீட்பு குழு மட்டுமின்றி அதிகாரிகள் உள்பட அரசு ஊழியர்களும் இரவு-பகல் பாராமல் மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகளுடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதிகளில் துரித நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமின்றி சில பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, சில பகுதிகளுக்கு ஊழியர்களை நியமித்து, நடைபெறும் பணிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிக்கும் அதிகாரிகளையும், கட்சியினரையும் தொடர்பு கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்தும் அவ்வப்போது விசாரித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையாநகர், 7வது வார்டுக்குட்பட்ட கலைஞர்நகர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக களமிறங்கி ஆய்வில் ஈடுபட்டு, மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான பணிகளை முடுக்கி விட்டார். மேலும், கலைஞர்நகர் மற்றும் பாக்கியநாதன் விளை பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார் அறையை ஆய்வு செய்தார்.
மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது..
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலமும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது..
கலைஞர் நகர், பொன் சுப்பையா நகர், அன்னை தெரசா நகர், மீனவ காலனி பகுதிகள் ஏசியன் டெவலப்மென்ட் மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை தொடங்கும் நிலையில் உள்ளது.. இது பள்ளமான பகுதியாகும்.. நீரை பம்பு மூலம் வெளியேற்றுவதா? கிராவிட்டி மூலம் போய் விடுமா என்பதை கொண்டு ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் மழை வந்துவிட்டது. மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.. மழை எங்கெங்கு தேங்கி இருக்கிறதோ அங்கே மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பணிகள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் பூங்காக்களுக்கு பல கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இருக்கக்கூடிய ரோடுகளையெல்லாம் குறுகலாக்கியுள்ளனர். இதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. சி.வ. குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டெவலப் பண்ணினார்கள் ஆனால் அங்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியின் அலட்சிய போக்கினாலும், முறையான திட்டமிடுதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட பணிகளால்; தூத்துக்குடி மக்கள் மழை காலங்களில் பெரிதும் பாதிப்பை சந்;தித்து வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி அனைத்து பணிகளும் திட்;டமிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தரமான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டபிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.