ஷ்யாம் நீயூஸ்
23.11.2023
மாநகர வளர்ச்சியில் வேகம் காட்டும் தூத்துக்குடி மேயர் ஜெகன்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த காலத்தில் எதிர்பாராமல் பெய்த கனமழையால் பொதுமக்கள் பல பகுதிகளில் மழைநீரால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவில் அவல நிலை ஏற்பட்டது. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நிலையில், தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் மழைநீர் பாதிக்கப்பட்ட அதே பகுதியை மீண்டும் பார்வையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் மற்றும் மேயரிடம் இதுபோன்ற நிலை அடுத்து வரும் மழை காலத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு அதற்கான கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய கழிவுநீர் கால்வாய் வசதிகள், சாலை வசதிகள் செய்தும், பக்கிள் ஓடை பகுதியில் அமலைச் செடிகள் அகற்றப்பட்டும் பல்வேறு பகுதிகளில் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. கடந்த காலத்தில் மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த மழைகாலத்தில் பெருமளவு பாதிப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.
தூத்துக்குடி வஉசி துறைமுகம் கிரீன் கேட் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, அப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு, எதிர்கால மக்கள் நலனை கருதி நல்லமுறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று அங்குள்ள பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் பின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. வருங்கால தலைமுறையினரின் மக்கள் நலன் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கடமைக்கு பணியாற்றினார்கள். அதனால் தான் தூத்துக்குடி மாநகரில் எதிர்பாராமல் பெய்த மழையால் முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், பிரையண்ட் நகர் என மாநகராட்சியின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதே ஓர் காரணம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் திமுக ஆட்சி பொறுப்பேற்று உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடைபெற்ற பின் பொறுப்புக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் எவ்வித தொய்வுமின்றி முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, 60 வார்டுகளிலும், கட்சி பாகுபாடின்றி மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். எதிர்வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மழைநீர் தேங்காமல் பசுமையான பகுதியாகவும், மாசு இல்லாத மாநகராகவும் உருவாக்கி காட்டுவதே எங்களது இலட்சியம். மற்ற கட்சியினரை போல் கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணர்வோடு பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்தார்.
.